வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம்: நாளை ஜோதி தரிசனம்

ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.நாளை காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனம் நடக்கிறது.
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம்: நாளை ஜோதி தரிசனம்
Published on

வடலூர்:

வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோறும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

இதில் தை மாதம் வரும் பூசநட்சத்திரத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆகையால் தைப்பூச ஜோதி தரிசன விழா இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

அந்த வகையில், 154-வது ஆண்டு தைப்பூச விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இதில் வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், வடலூர் சத்திய தருமச்சாலையிலும் இன்று காலை 7.30 மணி அளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து காலை 10 மணி அளவில் சத்யஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதில், சத்தியஞானசபையில் 6 காலமாக 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

அதன்படி, நாளை காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர், காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணிக்கும், 12-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

தற்காலிக வாகன நிறுத்தங்கள், பஸ் நிறுத்தங்கள் போன்றவையும் வடலூர் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தைப்பூச ஜோதி தரிசன விழா முடிந்த பின்னர், 13-ந்தேதி (வியாழக்கிழமை) மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திரு அறை தரிசன பெருவிழா நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com