புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிக பலன் தரும் அனுமன் வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.
Hanuman
Published on: 

புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்ததாகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள், அனுமனை வழிபடுவது சிறப்பு. ஆனாலும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை விரத வழிபாட்டுக்கு என்று தனி மகத்துவம் உண்டு. புரட்டாசி சனிக்கிழமை மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.

இலங்கை

இலங்கை வேந்தன் ராவணன் மனைவி மண்டோதரியின் கர்ப்ப காலத்தின் போது தனக்கு உலகிலேயே தலைசிறந்த வீரன் மகனாக பிறக்க வேண்டும் என்பதற்காக பாவ கிரகங்களை சிறையில் அடைத்து வைத்தான். பல காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சனி பகவானை, ராவணனின் சிறையில் இருந்து மீட்டார் ஆஞ்சநேயர்.

சனிக்கிழமை

அதற்கு நன்றிக் கடனாக தனக்குரிய சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடும் பக்தர்களுக்கு எந்த பாதிப்புக்களும் ஏற்படுத்த மாட்டேன் சனி பகவான் வாக்களித்தார். இதனால் சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான் என்பது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.

புரட்டாசி

ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

கன்னி

பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் சனி கிரக தோஷம் நீக்க விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

ராமகிருஷ்ண பெருமாள் 
கூடங்குளம்

புரட்டாசி மாதத் திருவோணம்

புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்பது போல புரட்டாசி சனிக்கிழமை சனிபகவான் அவதரித்தார் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

குலதெய்வ அருள்

புரட்டாசி சனிக்கிழமை அன்று காகத்திற்கு ஆல இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும் என்கின்றனர் பெரியவர்கள். புரட்டாசி சனிக்கிழமை அன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும். சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட சனிக்கிழமையில் ராம தூதரான அனுமனை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

ஆஞ்சநேயர்

சனிக்கிழமைகளிலும் சனி ஓரை நேரத்திலும் அனுமனை வழிபட்டு வருவது அல்லல்களையெல்லாம் போக்கி அருளக்கூடியது. மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்திக் கொடுப்பார் அனுமன் என்கிறார்கள் பெரியவர்கள். வீரத்தையும் ஞானத்தையும் தருபவர் அனுமன். அனுமனை வழிபட்டால் வலிமையும் உறுதியும் கொண்ட மனத்துடன் எந்த செயலையும் செய்ய முடியும். காரியம் அனைத்தையும் ஜெயமாக்கிக் கொடுப்பார் ஆஞ்சநேயர் என்கிறது ராமாயணம்.

சனி பகவான்

பொதுவாக பக்தியில் சிறந்தது அனுமபக்தி என்பார்கள். ஸ்ரீராமபிரான் மீது, அத்தனை அன்பும் பக்தியும் கொண்டிருந்தவர். அதனால் தான் பல ஆலயங்களிலும் கைகூப்பிய நிலையில் அனுமன் காட்சி தருகிறார். அனுமனின் பக்தர்கள், சனி பகவானின் பெயர்ச்சி குறித்தோ, சனி பகவான் என்ன செய்வாரோ என்ன நடக்குமோ என்பது குறித்தெல்லாம் வருந்தத் தேவையில்லை.

அனுமனின் அருளிருந்தால், சனீஸ்வரரின் தாக்கம் வெகுவாக இருக்காது. அவரின் பரிபூரண அருளையும் பெறலாம். அனுமன் சாலீசா பாராயணம் செய்து அனுமனுக்கு வெற்றிலை மாலையும் துளசி மாலையும் சார்த்தி வேண்டினால் சனி கிரக பாதிப்புகளில் இருந்து அனுமன் காத்தருள்வார்.

X

Maalai Malar
www.maalaimalar.com