

திண்டுக்கல் மாவட்டம், அகரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது முத்தாலம்மன் கோவில். இது 500 முதல் 1000ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இது முத்தாலம்மனுக்காக ஏற்பட்ட முதல் கோவிலாகக் கருதப்படுகிறது. தமிழ் எழுத்துக்களில் அகரமே முதல் எழுத்து. எனவே இவ்வூர் முதல் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ள ஊர் என்பதால் அகரம் என்று பெயர் பெற்றது என்கிறார்கள்.
விஜயநகரப் பேரரசு கோலோச்சி இருந்த நாட்களில் சக்கராய அய்யர் என்ற வட இந்திய பக்தர் ஒருவர் தென்னிந்தியா நோக்கிப் புறப்பட்டு வந்தார். அவர் புறப்படும் முன் அவர் தினமும் வழிபட்டு வந்த அம்மனை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார், “அன்னையே நான் தென்னிந்தியாவிற்குச் செல்கிறேன். அங்கே எந்தக் கோவிலில் எப்படி வழிபடுவேன்?” அவர் வழிபட்டு வந்த அம்மனும் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொன்னாள்.
“பக்தனே இங்கிருந்து சிறிது பிடி மண் எடுத்து உன்னுடன் கொண்டு செல். நீ எங்கே வைத்து என்னை வணங்க எண்ணுகிறாயோ அங்கே இந்தப் பிடிமண்ணை வைத்துவிட்டு என்னை மனமார வணங்கி அழைத்தால் நீ கூப்பிட்ட குரலுக்கு நிச்சயம் வருவேன்” என்று விரிவாகச் சொன்னாள்.
அய்யரும் கோவிலில் சிறிது மண் எடுத்துக் கொண்டு தெற்கே பயணமானார். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகில் வந்ததும் தான் கொண்டு வந்த பிடி மண்ணை அங்கே வைத்து அதனருகில் ஒரு கல்லை நட்டு வழிபட்டு வந்தார். நாளடைவில் ஊர் மக்கள் அக்கோவிலுக்கு வந்து வணங்க ஆரம்பித்தார்கள். வேறொரு பக்தர் மூன்று அம்மன் சிலைகள் வடித்து கோவில் கட்டினார். இக்கோவிலின் அம்மனுக்கு முத்தாலம்மன் என்று பெயர் வழங்கலாயிற்று. இதுவே முத்தாலம்மனுக்குக் கட்டிய முதல் கோவிலாகும்.
குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்த கோவில் இது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்றையும் அருளும் மூன்று அம்பிகையர் கருவறையில் உள்ளனர். இம்மூவரும் நின்ற கோலத்தில் கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திய தவக்கோலத்தில் காட்சி தருகிறார்கள். எனவே இந்த அம்மன்களிடம் வரம் வேண்டியது வேண்டியவாறு கிடைக்கும்.
இப்பகுதி மக்களுக்கான பிரதான குலதெய்வ வழிபாட்டுத்தலம் இது. பவுர்ணமி நாட்களில் அம்பிகைக்கு விசேஷ பூஜை உண்டு. கோவில் பிரகாரத்தில் முறையே விநாயகர், பாலமுருகன், மகாலட்சுமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சன்னதிகள் உண்டு. முருகனுக்கு கிருத்திகை நாட்களில் சிறப்பு பூசைகள் உண்டு. குரு, சனிப்பெயர்ச்சி காலங்களில் கிரக பரிகாரங்கள் நடக்கும்.
ஒரு மண்பானையில் அக்னியை வளர்த்து, அம்மன் உடுத்திய சேலையாகிய வேப்பிலையைக் கையில் வைத்து, அதன் மீது அக்னிச்சட்டியையும் வைத்து வேப்பிலையாலேயே அக்னியை நன்றாக சுடர் விட்டு எரியும்படி வீசிக் கொண்டும் ஆதி பராசக்தி, ஆயிமகமாயி, தன் கிரீடத்தின் கீழே தன் முடியை (மயிரை) எப்படி அவிழ்த்து விட்டிருக்கிறாளோ, அதே போல் பூவோடு (அக்னிச்சட்டி) எடுத்து வரும் மங்கையர் திலகங்களும் தமது சிங்காரச்சடைபோடும் கூந்தல்களை அவிழ்த்து விட்டு ஈரப்புடவையோடும், அக்னி சட்டியை கரங்களில் தாங்கி கோவில் இருக்கும் வீதிகளைச் சுற்றி மேள தாளங்கள் கொட்ட ஊர்வலமாக வருவதே அக்னிச் சட்டி அல்லது பூவோடு எடுத்தல் என்பதாகும்.
இதன் பயன் (கேஸ், வாயு, மின்சாரம், வாணவேடிக்கை, மருந்துகள் இவைகளால் ஏற்படும் விபத்துகள்) சர்ப்ப பயம், சத்துரு பயம், இடி மின்னல் இவைகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து அன்னை நம்மைக்காத்து அருள் புரிவாள் என்பதேஆகும்.