திருமண யோகம் தரும் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர்

27 நட்சத்திரங்களை தன் மனைவிகளாகக் கொண்டவன் சந்திரன்.மதுரையைப் போலவே இங்கும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
திருமண யோகம் தரும் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர்
Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ளது, ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று வகையிலும் பெருமை உடையதாக உள்ளது. சந்திரன் வழிபட்டு சிவன் அருள் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இக்கோவிலில் மூலவராக சோமேஸ்வரர், உற்சவராக சோமநாதர் ஆகியோர் உள்ளனர். அம்பாள் ஆனந்தவல்லி தாயார். புராண காலத்தில் இந்த ஊர் 'சந்திர பட்டணம்' என்று வழங்கப்பட்டு உள்ளது.

27 நட்சத்திரங்களை தன் மனைவிகளாகக் கொண்டவன் சந்திரன். அந்த மனைவிகளில் ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவர் மீது மட்டும் மிகுதியான அன்பு கொண்டவனாக இருந்தான். இதைக்கண்டு கோபமுற்ற அவனது மற்ற மனைவிகள் இதுபற்றி தம் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். இதைக் கேட்டு சினமடைந்த தட்சன், சந்திரனுக்குச் சாபம் கொடுத்தான். இதன் காரணமாக வெப்பு நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், பொலிவிழந்து தேயத் தொடங்கினான். தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி வருந்திய சந்திரன், தன் சாபத்துக்கு விமோசனம் என்னவென்று அகத்தியரிடம் கேட்டான். அதற்கு அவர், 'வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள வில்வ வனத்தில் உள்ள லிங்கத்தை கோவில் கட்டி வணங்கினால் இந்தப்பிணி நீங்கும்' என்று கூறினார்.

அதன்படியே சந்திரனும் செய்து தன் பிணியை நீக்கிக்கொண்டான். மேலும் சந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் திருமுடியில் சந்திரனுக்கு இடம் தந்ததாக கோவில் தல வரலாறு தெரிவிக்கிறது. சந்திரன் தன்னுடைய கலைகளால் அபிஷேகம் செய்ததால் இங்குள்ள சுயம்பு லிங்கம் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறது. இத்தலத்தில் சந்திர பகவான், தம் இரு மனைவியரான ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவருடன் ஒரே கல்லில் சிற்பமாக தனிச் சன்னிதியில் காட்சியளிப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பு.

மதுரையில் ஆட்சி செய்த நாயக்க வம்சத்திற்குப் பிறகு, வேற்று மதத்தினர் மதுரையம்பதியைக் கைப்பற்ற முனைந்தனர். அப்போது, சிவகங்கை மன்னர் சசிவர்ணரும், சேது காவலரும் இதை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். வீரத்திற்கு இலக்கணம் வகுத்த தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரன் தலைமையில் சேது சேனையும், விவேகத்தில் சிறந்த தாண்டவராயப் பிள்ளை தலைமையில் சிவகங்கை மறவர் படையும் வீறு கொண்டு எழுந்தன. அவர்கள் ஆலவாய் அண்ணலையும், அங்கயற்கண்ணியையும் தக்க பாதுகாப்புடன் மானாமதுரைக்குக் கொண்டு வந்து சோமநாதர் கோவிலில் பாதுகாப்பாக வைத்ததாக சொல்லப்படுகிறது. மீனாட்சியும், சொக்கநாதரும் இரண்டு ஆண்டுகள் இவ்வாலயத்தில் வீற்றிருந்து பின்னர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இத்தலத்தில் பல சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிவபெருமான் தனது திருவிளையாடலின் போது தமது அடியார் மாணிக்கவாசகருக்காக இத்தலத்தில்தான் நரிகளைப் பரிகளாக மாற்றிட, கயிறு மாற்றிக்கொடுத்தார். ராமர், அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு வந்து இறைவனைப் பூஜித்து, அதன் பின்பு சேது பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்றார். ராமன், ராவணனுடன் போர் புரிந்த போது வானரச் சேனைகளின் பசியை போக்கிய தலம். பலராமர் தனது தீர்த்த யாத்திரையின் போது சூரனைக் கொன்றதால் பாவம் ஏற்பட்டது. அதன்பின் இத்தலத்திற்கு வந்து வில்வ வனத்தில் இருந்த லிங்கத்தினைப் பூஜித்து பாவவிமோசனம் பெற்று பின் துவாரகையை மீட்டார்.

ஐந்து நிலை கோபுரத்துடன் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த ராஜகோபுரத்தில் இத்தலத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது என்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் சோமநாத சுவாமி, ஆனந்தவல்லி அம்மன் சன்னிதிகளுடன், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சதாசிவ பிரம்மேந்திரர் உபசன்னிதிகளும் உள்ளன. இங்குக் கோவில் தேர், கோவில் கல்வெட்டு போன்றவை உள்ளன. கோவிலின் தல விருட்சமாக வில்வ மரமும், தல தீர்த்தமாக சந்திர புஷ்கரணியும் உள்ளன. காரண ஆகமப்படி கோவிலில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மதுரையைப் போலவே இங்கும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் என்றால், இங்கு ஆனந்தவல்லி சோமநாதராகக் காட்சியளிக்கிறார். மதுரையில் கள்ளழகர் என்றால், மானாமதுரையில் காட்சி தருபவர் வீர அழகர். மதுரையம்பதியில் மீனாட்சி சொக்கநாதருக்கு நடக்கும் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

இக்கோவிலில் காரண ஆகம முறைப்படி நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு சித்திரை திருவிழா, ஆடி திருவிழா, சித்திரை தேரோட்டம், மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா விமரிசையாக நடைபெறும்.

இங்கிருக்கும் சந்திர புஷ்கரணியில் நீராடி இறைவனை மனமுருகி வழிபட்டால் தீராத சரும நோய்கள் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. இங்கு, ஆடித் தபசு திருநாளில் சுவாமிக்கு அணிவித்த மாலைகளை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்வித்தால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

கோவில் தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் பக்தர் வழிபடுவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பிரதான சாலையில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மானாமதுரை சோமநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com