

கன்னியாகுமரி மாவட்டத்தில் முப்பந்தல் இசக்கியம்மன், மேலாங்கோடு இசக்கியம்மன், நடுக்காட்டு இசக்கியம்மன் என்று புகழ்பெற்ற இசக்கியம்மன் ஆலயங்கள் உள்ளன. இவற்றுள் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் பல நூறு ஆண்டுகளுக்குமுன் உருவான பழம் பெரும் கோவிலாகும்.
இந்த கோவில் கோட்டாரில் இருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் நாகர்கோவில் நகர எல்லைக்குள் அமைந்துள்ளது.
முற்காலத்தில் இப்பகுதி காடாக இருந்ததாலும், நடுக்காட்டில் கோவில் இருந்ததாலும் இது நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதவி இசக்கியம்மன் கோவிலுக்கு சென்று பால்சோறு படைத்து வணங்கியதாக இளங்கோவடிகள் கூறியுள்ளார்.
தேவி அமர்ந்த கோலத்தில் இருக்க, இடப்பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அதன் அருகே முருகன், அய்யப்பன், சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்று வழிபட்டு வருகின்றனர். இந்த 2 நாட்களும் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. கேட்ட வரம் தந்தருளும் கண்கண்ட தெய்வமாக இசக்கியம்மன் விளங்குகிறார்.
வருடந்தோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் திருவழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். ஆண்களைவிட பெண்களே இசக்கியம்மனை அதிகமாக வழிபடுகிறார்கள்.
இசக்கியம்மனை வழிபட்டால் பெண்களின் மாதாந்திர பிரச்சினைகளில் உள்ள சிக்கல்கள் தீருமென்றும், சுகமான குழந்தைப்பேறு உண்டாகும் என்றும், குழந்தைகளின் நோய் நொடிகள் நீங்கும் என்றும் நம்புகிறார்கள்.
இதனால் கோவிலில் பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படும். மேலும் அம்மனிடம் மனம் உருகி வேண்டினால் அனைத்து வரமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகும்.