செல்வத்தை வாரி வழங்கும் கஜலட்சுமி விரத மகிமை

கஜலட்சுமி உருவத்தின் பின்னணியில் ஒரு மிக முக்கியமான புராண வரலாறு உள்ளது
செல்வத்தை வாரி வழங்கும் கஜலட்சுமி விரத மகிமை
Published on
Summary

கஜலட்சுமி வழிபாடு வாழ்க்கையின் கடினமான சோதனைகளை எதிர்கொள்ளும் மன உறுதியைத் தருகிறது. இந்த கஜலட்சுமி விரத நாளில் தூய்மையான மனதுடன் அன்னையை வழிபடுவதன் மூலம், நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருந்து சகல பாக்கியங்களும் பெருகும்.

இந்து சமய நம்பிக்கைகளின்படி, மனிதர்களின் வாழ்வில் குறையாத செல்வம், செல்வாக்கு, ராஜயோகம் மற்றும் பலவிதமான ஐஸ்வர்யங்களை அருளும் உன்னதமான விரதங்களில் கஜலட்சுமி விரதம் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

வழிபாடு

இந்து மதத்தில் அஷ்டலட்சுமிகளின் வழிபாடு மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இவர்களில் செல்வம், ராஜயோகம், தைரியம் மற்றும் வலிமை ஆகியவற்றின் அதிபதியாகப் போற்றப்படுபவர் அன்னை கஜலட்சுமி. இவரை வேண்டி மேற்கொள்ளப்படும் கஜலட்சுமி விரதம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், வாழ்வில் குறையாத ஐஸ்வர்யத்தைத் தரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது.

அஷ்டலட்சுமி

அஷ்டலட்சுமிகளில் ஒருவரான கஜலட்சுமி தேவியை முழு நம்பிக்கையுடன் வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் பல நன்மைகளைப் பெறலாம். பொதுவாக கஜலட்சுமி விரதம் அல்லது பூஜை என்பது ஆவணி மாத வளர்பிறை தசமி திதியில் அனுசரிக்கப்படுகிறது. பஞ்சாங்க கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாத மத்தியில் நாளை (திங்கட்கிழமை) கஜலட்சுமி விரதமானது வருகிறது.

கஜலட்சுமி

கஜலட்சுமி உருவத்தின் பின்னணியில் ஒரு மிக முக்கியமான புராண வரலாறு உள்ளது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காக மந்திர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அந்தப் பாற்கடலிலிருந்து பல அரிய பொருட்களுடன் அன்னை மகாலட்சுமி திவ்ய சொரூபமாகத் தோன்றினாள்.

அபிஷேகம்

பாற்கடலில் உதித்த அன்னைக்கு தேவலோகத்து வெள்ளை யானைகள் (ஐராவதம்) தங்கக் குடங்களால் புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்து மரியாதை செலுத்தின. யானைகளால் நீராட்டப்பட்டு அருள் புரிந்த காரணத்தினால் அன்னை ‘கஜலட்சுமி’ என்ற திருநாமம் பெற்றார்.

விரதம்

துர்வாச முனிவரின் சாபத்தால் தனது செல்வங்களையும், ராஜபோகங்களையும் இழந்த தேவர்களின் அரசனான இந்திரன், கஜலட்சுமி தேவியை நோக்கி கடுமையான விரதம் இருந்து தனது இழந்த ராஜ்யத்தையும் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றான். அன்று முதல் செல்வம், அதிகாரம் மற்றும் ஆட்சியை விரும்பும் அனைவரும் இந்த விரதத்தை அனுசரிக்கத் தொடங்கினர்.

மகாலட்சுமி விரதம்

கஜலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் பொதுவாக 16 நாட்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு விரதமாகும். இந்த ஆண்டுக்கான 16 நாள் விரதமானது புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதியில் தொடங்கி, வருகிற அக்டோபர் 3-ந்தேதி வரை நீடிக்கிறது. திதி கணக்கீடுகளின் அடிப்படையில் இது சுமார் 15 முதல் 16 நாட்கள் வரை அனுசரிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை

16 நாட்களும் தொடர்ந்து விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரதத்தின் முக்கிய நாட்களான முதல் நாள் (அஷ்டமி), எட்டாவது நாள் மற்றும் இறுதி நாள் (16-ம் நாள்) ஆகிய நாட்களில் மட்டும் விரதமிருந்து வழிபடலாம். மேலும், பலரும் வழக்கமான வெள்ளிக்கிழமைகளில் (11 வெள்ளிக்கிழமைகள்) கஜலட்சுமி விரதத்தை மேற்கொள்வதும் உண்டு.

பூஜை செய்யும் முறை

கஜலட்சுமி விரதத்தை மிக எளிமையான முறையிலும், அதேசமயம் தூய்மையாகவும் அனுசரிக்க வேண்டும். விரத நாளன்று அதிகாலையில் நீராடி, வீட்டைத் துாய்மை செய்து பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும். பூஜை மேடையில் சிவப்பு அல்லது மஞ்சள் துணி விரித்து, அரிசி மாவினால் தாமரை மலர் கோலமிட வேண்டும்.

கலசம்

கஜலட்சுமி தேவியின் திருவுருவப்படம் அல்லது விக்கிரகத்தை வைக்க வேண்டும். அருகில் சிறிய யானை பொம்மைகளை (வெள்ளி அல்லது களிமண்) வைப்பது மிகவும் சிறந்தது. மஞ்சள் தடவிய சொம்பில் நீர் நிரப்பி, மாவிலை மற்றும் தேங்காய் வைத்து கலசம் அமைக்கலாம்.

நைவேத்யம் மற்றும் அர்ச்சனை

தாயாருக்குத் தாமரை மலர்கள் மிகவும் உகந்தவை. பாயசம், சர்க்கரை பொங்கலுடன் கனி வகைகளை நைவேத்யமாகப் படைத்து, தீபாராதனை காட்ட வேண்டும். வட மாநில பாரம்பரிய முறைப்படி, 16 முடிச்சுகள் இடப்பட்ட மஞ்சள் கயிற்றில் குங்குமம் வைத்து கஜலட்சுமி தாயாருக்குப் படைத்து கையில் கட்டிக் கொள்வது வழக்கம். தாயாருக்குத் தாமரை மலர்கள் மிகவும் உகந்தவை. பாயசம், சர்க்கரை பொங்கலுடன் கனி வகைகளை நைவேத்யமாகப் படைத்து, தீபாராதனை காட்ட வேண்டும்.

கஜலட்சுமி விரதத்தின் பலன்கள்

சமுததத்தில் உயர்ந்த அந்தஸ்து, பெயர், புகழ் மற்றும் தலைமைப் பண்புகளைப் பெற இந்த விரதம் பெரிதும் உதவுகிறது.

நிலம் மற்றும் சொத்துச் சேர்க்கை

அஷ்டலட்சுமி வடிவங்களில் கஜலட்சுமி தாயார் அசையா சொத்துக்கள், வீடு, வாகனம், நிலம் மற்றும் கால்நடைச் செல்வங்களை வழங்கக் கூடியவள்.

தொழிலில் நஷ்டம்

தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள் அல்லது வியாபாரத்தில் லாபம் பெருக விரும்பும் வணிகர்கள் கஜலட்சுமி தேவியை மனதார வழிபட நல்ல திருப்பம் உண்டாகும். யானையானது வலிமை மற்றும் தைரியத்தின் சின்னம் என்பதால், கஜலட்சுமி வழிபாடு வாழ்க்கையின் கடினமான சோதனைகளை எதிர்கொள்ளும் மன உறுதியைத் தருகிறது. இந்த கஜலட்சுமி விரத நாளில் தூய்மையான மனதுடன் அன்னையை வழிபடுவதன் மூலம், நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருந்து சகல பாக்கியங்களும் பெருகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com