

5-ம் இடம் குல தெய்வம், பூர்வீகச் சொத்து, அதிர்ஷ்டம் மற்றும் குழந்தைகள் பற்றிக் கூறுமிடம். சந்திரன் ஐந்தாம் பாவத்தில் இருந்தால் குல தெய்வ கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு உண்டாகும். குல தெய்வம் அருகிலேயே இருக்கும். அடிக்கடி அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே, வாழும் காலத்தில் அனைத்து அதிர்ஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசி பெற்றவர்கள். இன்சூரன்ஸ், உயில் சொத்து, போட்டி, பந்தய வெற்றி போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அனைவரையும் கவரும் நல்ல குணம் உண்டு. பெரிய பதவிகளைப் பெறுவார்கள். சிறிய முயற்சி செய்தால் கூட எல்லாம் தானாகவே சுபமாக நடந்து முடியும். தொட்டது துவங்கும். ஆழ்ந்த புலமையும், தொழில் ஞானமும், தெளிவான உள்ளுணர்வும், மன நிறைவும் நிரம்பியவர்கள்.
முன்னோர் வழி குலத் தொழிலைச் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை, முறையான திட்டமிடுதல் மூலம் அனைத்து விதமான நன்மைகளையும் அடைவார்கள். கிடைத்த அதிர்ஷ்டத்தை தக்க வைக்கத் தெரியாமல் தவற விட்டு வருந்துவார்கள். பூர்வீகச் சொத்திற்காக மிகவும் சிரமப்பட நேரும். சொத்து கிடைக்காது அல்லது கிடைத்தாலும் பயன்படாது. குழந்தை பிராப்தத்தை சந்திரன் கொடுப்பதற்கு மிகவும் தாமதப்படுத்தும். இதன் காரணமாகவே இவர்களுக்கு குழந்தை பிராப்தம் இல்லாமல் போய்விடும். இவர்களுக்கு குழந்தைகள் மூலம் தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏற்படும். குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தவறான காதலர்களை தேர்வு செய்து வாழ்வை தொலைப்பதில் முன்னனியில் நிற்பவர்கள். தாய்மாமாவை மலை போல் நம்பி வாழ்வார்கள். முறையான குல தெய்வ வழிபாடு வளர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
6-மிடம் உத்தியோகம். நோய், எதிரி, கடன் பற்றிக் கூறுமிடம். சந்திரன் ஆறில் இருப்பவர்கள் 6 மாதம் தொழில், 6மாதம் உத்தியோகம் என மாறி மாறி காலத்தை கடத்துவார்கள் அல்லது ஒரே வேலையில் நிலையாக இருக்க மாட்டார்கள் அல்லது இவர்கள் விரும்பும் பணிக்கு ஆயிரம் மணல் கயிறு கண்டிஷன் போடுவார்கள். மேலும் உத்தியோகத்தில் நிலையில்லாமல் இருப்பார்கள். அதாவது இவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றமும் இருக்காது. உத்தியோகத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் அவ்வளவு சீக்கிரமாக வராது. உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் சந்திரன் இவர்களை அதிகமாக திண்டாட வைப்பார். இவர்களுக்கு முதன்முதலில் கிடைக்கும் உத்தியோகம் இவர்களுக்கு ஒத்து வந்தால் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் இவர்கள் நினைக்கும் போதும் இவர்கள் வேண்டும் போதும் உத்தியோகம் சார்ந்த வாய்ப்புகள் இவர்களுக்கு வரவே வராது. எந்த லக்னமாக இருந்தாலும் ஆறில் சந்திரன் சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல. சந்திரன் இவர்களை போட்டு குழப்புவதால் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். சுயமாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும் திறனும் இல்லாதவர்கள். நித்திய கண்டம் பூரண ஆயுள் என் வாழ்பவர்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்த தெரியாதவர்கள். பிறரால் ஏமாற்றப்படுவார்கள். சதா எதையாவது நினைத்து கவலைப்பட்டு நோயை வளர்ப்பவர்கள். நோய்க்கு வைத்தியம் செய்து கடன் உருவாகும். மனக் கட்டுப்பாடு இல்லாதவர்கள். அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்தால். கடன் பிரச்சனை அதிகரிக்கும். இவர்கள் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. அடிமைத் தொழிலே சிறப்பு. தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையான நித்திய பிரதோஷ வேளையில் சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.
7-மிடம் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் பற்றிக் கூறுமிடம். 7-ல் சந்திரன் இருப்பவர்கள் வாழ்க்கைத் துணை பற்றிய மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பை குறைத்து தேடி வந்த வரனை திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். ஏழில் உள்ள சந்திரன் லக்னத்தை பார்ப்பதால் இளகிய மனத்தால் எல்லோரையும் எளிதில் நம்பி கொடுத்து விட்டு பின் யோசிப்பார்கள். நிறைய நண்பர்கள் இருப்பார்கள். புதுப்புது நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். நல்லவர்களையும், கெட்டவர்களையும் எளிதில் இனம் காணத் தெரியாது. சுயமாக சிந்திக்கும் திறன் இருக்காது. நண்பர்களை சார்ந்தே வாழ விரும்புவார்கள் நண்பர்களால் இவர்களுக்கு பாதகமே மிகுதி.
வாய்ப்பு கிடைக்கும் போது தட்டிக் கழிப்பார்கள் அல்லது பயன்படுத்த தெரியாது. இவர்கள் முதலீடு அதிகம்இல்லாத சுய தொழில் செய்யலாம். இவர்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேடித் தேடி வருவார்கள். சிறு சில்லரை வணிகம் செய்தால் பெரும் லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்யக் கூடாது. இந்த வரன் வேண்டாம் வேறு வரனை பார்க்கலாம் என்று நினைத்து வந்த வரனைத் தவற விட்டால் திருமணம் கால தாமதமாகும். அதே போல் இவர்கள் கூட்டுத் தொழில் செய்யக் கூடாது அல்லது அடிக்கடி கூட்டாளிகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் சம்பந்திகளிடம் எட்டி நிற்க வேண்டும். ஒட்டி உறவாடக் கூடாது. சுப பலனை அதிகரிக்க வீட்டின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு தானியம் மற்றும் தண்ணீர் வைக்க வேண்டும். வளர்பிறை சப்தமி திதியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட சந்திரனால் ஏற்படும் கெடு பலன்கள் அகலும்.
8-மிடம் என்பது ஆயுள், ஆரோக்கியம், வம்பு, வழக்கு, தீராத நோய், கடன் பற்றிக் கூறுமிடம்.ஆறாம் பாவகத்திற்கு பாவத் பாவம் எட்டாம் பாவம். ஆறாம் பாவகத்தால் உருவாகும் பிரச்சனைகளை மிகுதிப் படுத்தித் தருவது எட்டாம் பாவகம். ஆறில் உள்ள கிரகம் காலம் தாழ்த்தியாவது பிரச்சனையை முடிக்கும். எட்டில் உள்ள கிரகம் தீராத பிரச்சனையை தரும். எதை செய்தாலும் தவறாகவே முடியும். எட்டில் உள்ள சந்திரன் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் எட்டில் சந்திரன் இருப்பவர்கள் இளம் பருவத்தில் மிகுதியான கஷ்டத்தை அனுபவித்து இருந்தால் வாலிப வயதில் சுதாரித்துக் கொண்ட வாழ்க்கையை வாழ்வார்கள். சிலர் விபரீத ராஜ யோகத்தை அனுபவிப்பார்கள். இளம் வயதில் கஷ்டம் தெரியாத வாழ்க்கையை வாழ்ந்தால் ஆறு மற்றும் எட்டாம் பாவகம் இணைந்து தீராத கடன், நோயை தந்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது. எட்டில் நிற்கும் கிரகம் மதில் மேல் பூனை தான் என்பதால் நிதானம் மிக முக்கியம். எட்டில் சந்திரன் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். சுய தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எட்டில் நிற்கும் சந்திரன் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்பதால் ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் மேல் அடிக்கடி வழக்கு பதிவாகும். தவறே செய்து இருந்தால் கூட வழக்கில் இருந்து எளிதாக விடுபடுவார்கள். இவர்களுக்கு தாய் வழி மரபணு தொடர்பான தீராத நோய் இருக்கும். அதே போல் கடனும் தீராது. ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பார்கள். ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், பிஎப் இவர்களுக்கு உதவாது. எட்டில் உள்ள சந்திரன் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் சொந்தத் தொழிலில் நிலையற்ற வருமானமே நீடிக்கும் அல்லது வரும் வருமானத்தை தங்கள் பேச்சால் தாமே கெடுத்துக் கொள்வார்கள். தங்களது வாக்கால் வம்பு, வழக்கை தாங்களே தேடிக் கொள்வார்கள். எட்டில் சந்திரன் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். சுய தொழில் சிறப்பல்ல. செவ்வாய்கிழமைகளில் திருச்செந்தூர் முருகனை சரணாகதியடைந்து வழிபட எட்டாமிட குற்றம் நீங்கும்.
9-மிடம் என்பது பாக்கிய ஸ்தானம், தந்தை, தந்தை வழிச் சொத்துகள், ஆன்மீக நாட்டம், தீர்த்த யாத்திரை, வெளிநாட்டுப் பயணம், உயர் கல்வி பற்றிக் கூறுமிடம். ஒன்பதில் சந்திரன் இருப்பவர்கள் பாக்கிய பலம் மிகுந்தவர்கள். உயர்ந்த சிந்தனை உண்டு. தொழிலை பயபக்தியுடன் செய்வார்கள். ஏழாமிடம் நண்பர்களை வாடிக்கையாளர்களை, தொழில் கூட்டாளிகளை குறிக்குமிடம். ஏழாம் பாவத்தின் பாவத்பாவம் ஒன்பதாமிடம் என்பதால் வம்சா வழியாக நிலையான, நிரந்தரமான தொழில் கூட்டாளிகளை, நண்பர்களை, வாடிக்கையாளர்கள் உண்டு. பல தொழில் முனைவோர்களுக்கு ரோல் மாடலாக வாழ்வார்கள்.வெளிநாட்டு வணிகம் மற்றும் முன்னோர்களின் குலத் தொழில் ஆகியவற்றில் கை தேர்ந்தவர்கள். உள்ளு ணர்வு மிகுந்தவர்கள். எதையும் தெளிவாக யோசித்து திறம்படச் செய்யும் ஆற்றல் உண்டு.
விசுவாசமான, நம்பிக்கையான வேலையாட்கள் நிரம்பப் பெற்றோர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் நிரம்பியவர்கள். தாயை தந்தையாக பாவிப்பர்கள். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்வதில் ஆர்வம் மிகுந்தவர். வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். இவர்கள் தொலைதூர பயணம் சார்ந்த விஷயங்களிலும் வெளிநாட்டுப் பயணம் அல்லது வெளிநாட்டுக் கல்வி சார்ந்த விஷயங்களிலும் சந்தர்ப்பம் ஒருமுறை வரும் போதே அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் கடந்து உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்பு பற்றி யோசித்தால் படிக்க முடியாமல் போய்விடும். இவர்களின் தந்தை தன்னுடைய சொத்து இவர்களின் பெயரில் எழுதுகிறேன் என்று சொன்னால் உடனடியாக சொத்தை எழுதி வாங்கி விடவேண்டும். அமாவாசை திதிகளில் இயன்ற உணவு தானம் தண்ணீருடன் செய்து வர பாக்கிய பலன் மேலும் அதிகரிக்கும்.
தொடரும்.....