

ஒரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தாலும் விதியால் ஏற்படும் வினைகளைத் தீர்ப்பது மதியெனும் சந்திரனாகும். ஆக விதிக்கு துணையாக இருப்பது மதி எனும் சந்திரனாகும். அதனால் தான் சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்து பிறந்தநாள் கொண்டாடுகிறோம், திருமணப் பொருத்தம் பார்க்கிறோம், ஜாதக ரீதியான தசை புத்தி மற்றும் கோட்சார பலன்கள் கணிக்கிறோம்.
எழுதப்பட்ட கர்மா விதிப்படி தான் நடக்கும் என்றாலும் விதியால் ஏற்படப் போகும் விளைவுகளை உணரும் உள்ளுணர்வைத் தருவதும் சந்திரன் தான். சந்திரன் வளர்ந்து தேயும் கிரகம் என்பதால் சந்திரன் நின்ற பாகவம் மூலம் கிடைக்கும் பலன்களும் நிதானிக்க முடியாத விதத்தில்தான் இருக்கும். ஒரு ஜாதகத்தில் விதிக்கு தீர்வு தரும் மதி எனப்படும் சந்திரனின் நிலை மிக மிக முக்கியம்.
ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் மூலம்தான் அனைத்து விதமான யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன. சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் வாழ்க்கையில் வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் என்பது உடல் மற்றும் மனம். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும் கொண்ட ஒருவரே வாழ்வில் வெற்றி பெற முடியும். சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவர். சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே தெளிவான சிந்தனை உண்டாகும். ஒருவருக்கு எந்தவிதமான கஷ்ட, நஷ்டங்கள் வந்தாலும் முதலில் பாதிப்பது மனம்தான்.
அமைதியின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும். அதனால் தான் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் லக்னத்திற்கு இணையான முக்கியத்துவத்தை பெறுகிறது. சந்திரன் தினக்கோள் என்பதால். வேகமாக சுற்றி 30 நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இவ்வாறு கடக்கும்போது தினமும் சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து மனிதர்களின் மனநிலை மாறுவதுடன் லாப நஷ்டங்கள், நிறை குறைகள், சிந்தனை, கோபதாபம், உற்சாகம், வீண் அலைச்சல், பயணங்கள், காதல், காமம் என்று பல்வேறு பலன்கள் ஏற்படும்.
ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரன் வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாவியாகவும் விளங்குகிறார். ஜனன ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் பண்பு, பாசம், நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கௌரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும்.
சந்திரன் மனோகாரகன் என்பதால் அவர் பல மிழந்திருந்தால் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி, தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மன நிலை பாதிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்று போக்கு, அஜீரணம், குடல் புண், முகப்பரு, தைரிய குறைவு, நீரினால் கண்டம், நீர்வாழ் விலங்குகளால் கண்டம், ரத்தத்தில் தூய்மையில்லாத நிலை, சளி, காய்ச்சல் போன்ற அனுகூலமற்ற நிலை ஏற்படும்.
சந்திரன் மனம் மற்றும் உடலுக்கு அதிபதி ஆவார். ஒருவர் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய நல்ல, கெட்ட செயல்களுக்கு ஏற்ப அவர் உடல் வடிவமைக்கப்படும். ஒரு ஜாதகத்தில் எந்தக் கட்டத்தில் அமர்ந்தால் முன் ஜென்ம வினையை அனுபவிக்க முடியுமோ அதற்கு ஏற்ற இடத்தில் ஜாதகரின் பிறப்பு கால சந்திரனின் நிலைப்பாடும் இருக்கும். அதே போல் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சந்திரன் எந்த பாவத்தில் இருக்கிறாறோ அந்த பாவகம் சார்ந்த அனைத்து விஷயங்களும் நிலையில்லாத கொடுப்பினையாக, பலனாக இருக்கும். வரும் என்று நினைத்தால் வராது, ஆகாது என்று நினைத்தால் பலன் கொடுக்கும். அதாவது ஜாதகத்தில் சந்திரன் நின்ற பாவத்தின் பலன் கிடைக்கும் போதே அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவற விட்டால் அதன் பலன் திரும்ப கிடைப்பது அரிது. இந்த கட்டுரையில் சந்திரன் நின்ற வீட்டு பலன்களையும் அதற்கான பரிகாரத்தையும் பார்க்கலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் அல்லது லக்னாதிபதியுடன் சந்திரன் நின்றால் ஜாதகர் அழகான தோற்றப் பொலிவும் ஒளி மற்றும் புன்னகை பூத்த முகம், அழகான கண்கள், காந்தப் பார்வை மற்றும் வசீகரமான தோற்றம் உண்டாகும். தாய் அன்பும் நிறைந்தவர்கள். கற்பனை வளம்மிகுந்தவர். ஒரு இடத்தில் நிலையாக இருக்காமல் சுறுசுறுப்பாக அடிக்கடி இடப்பெயர்ச்சி மற்றும் புதிய தொழில் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். நினைத்த செயலை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்கும் மனப்பான்மை உள்ளவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் பழகுவார்கள். சுய முயற்சியால் வெற்றிக்கனியை சுவைப்பவர்கள். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். இவர்களின் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே இவர்களைத் தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் திறமையாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
சொத்து சுகம் வீடு வாகன யோகம் நிரம்பியவர்கள். எல்லாம் முறையாக சரியாக நடந்தால் கூட ஆழ்மனதில் இடம் புரியாத கவலை சோகம் இருக்கும். தனது கவலையை துக்கத்தை மனபாரத்தை குறைக்கக்கூடிய ஒரு நட்பை எதிர்பார்ப்பார்கள். வாழ்க்கை துணையை பற்றி எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்பு குறையும் போது மனத்தெளிவற்ற நிலை, சோர்வு அல்லது ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். தனிமையை விரும்பாமல் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூட்டமாக இருக்க விரும்புவார்கள். இவர்கள் சுப பலனை அதிகரிக்க தினமும் சந்திர ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.
இரண்டாமிடம் என்பது தனம், வாக்கு, குடும்பம் பற்றிக் கூறுமிடமாகும். ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் என்றால் வாய் ஜாலம் நிறைந்தவர்கள். தன் பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்ந்து பொருளீட்டுவார்கள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் பேசியே சரி செய்து விடும் திறமை உண்டு. பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவர்கள். இவர்கள் அன்றாடம் அழியக் கூடிய பொருட்களான காய்கறி, பழம் வியாபாரம், மளிகைக்கடை, பால், தயிர், குளிர் பானங்கள் போன்ற பொருட்களால் வியாபாரம் செய்து வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.
குளிர்ந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். குளிர் பிரதேசங்களில் வாழ விரும்புவார்கள். குடும்ப உறவுகளுடன் ஒட்ட மாட்டார்கள். நிறைவேற்ற முடியாத வாக்கை கொடுத்து விட்டு வருந்துவார்கள். அத்துடன் அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்காது. ஆறு மாதம் வருமானம் வரும் ஆறு மாதம் வருமானம் வராது. நிலையான வருமானம் இருக்காது. சந்திரனைப் போல வருமானமும் நிலையற்றதாக இருந்தாலும் கிடைக்கும் பொருளை கவனமாக பாதுகாத்து பயன்படுத்துவார்கள். புதிய வாய்ப்புகளைத் தேடித் தேடி உருவாக்குவார்கள். தளராத முயற்சி உடையவர்கள்.வரும் முன் அறியும் தீர்க்க தரிசிகள். செய்யும் தொழில் பற்றிய ஞானத்தை வளர்த்துக் கொண்டே இருப்பவர்கள். தொழில் தொடர்பான ஆலோசனை வழங்குவதில் மதி மந்திரியாக திகழ்வார்கள். பகல் இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதிகளையும் தேடிக்கொள்பவர்கள். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களை கவனமாக பராமரிப்பார்கள். மேலும் சிறப்பான பலன் பெற வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை, மஞ்சள் வாழைப்பழம் உண்ணத் தர வேண்டும்.
மூன்றாமிடம் என்பது முயற்சி ஸ்தானம், சகாய ஸ்தானம், இளைய சகோதரன் பற்றிக் கூறுமிடம். மூன்றாம் பாவத்தில் சந்திரன் இருப்பவர்கள் நிலையாக ஒரே இடத்தில் இருக்க முடியாமல் அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற பழமொழி சந்திரன் மூன்றில் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். முத்தாய்பான முயற்சியுடையவர்கள். காலில் சக்கரம் கட்டிக் கொண்டு உழைப்பவர்கள். துணிவு, சிக்கனம் மிகுந்தவர்கள். எதிரிகளை வெல்லும் தைரியம் உண்டு. திட்டமிடுதலில் ராஜ தந்திரி. இவர்கள் ஒரு செயலுக்குத் திட்டமிட்டால் கனகச்சிதமாக இருக்கும். இவர்களின் ஆலோசனைக்காக இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும். சமூக அதிகாரம் மிகுந்தவர்கள். ஞாபக சக்தி மிகுந்தவர்கள். பயணம் சார்ந்த தொழில் மற்றும் கடல் சார்ந்த தொழிலில் ஆர்வம் அதிகம்.
தொழிலுக்கு சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தேடித் தேடி வரும். நிலையான முயற்சி உள்ளவராக இருப்பார். உணர்ச்சிவசப்பட்டு சுய முடிவு எடுப்பார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மிக உயர்ந்த உன்னத நிலையை அடைவார்கள். இவர்கள் யாரிடமும் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. இவர்கள் கடன் வாங்கினால் கடனை திருப்பி செலுத்துவது கடினம். முறையான திட்டமிடுதல் இருக்காது. அண்டை அயலாருடன் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களான பட்டா, சிட்டா ஆகியவற்றில் பிழை இருக்கும்.
இளைய சகோதரர், தங்களுடைய நண்பர்கள் மூலமாகவும் இளைய சகோதரர் மூலமாகவும் ஏதாவது உதவிகள் பயன்கள் இவர்களைத் தேடி வந்தால் அதை தட்டிக் கழிக்காமல் அவர்களிடமிருந்து இவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறவிட்டால் இவர்களுக்கு ஒரு உதவி அல்லது பயன்கள் தேவைப்படும்போது நண்பர்களிடமிருந்தும் இளைய சகோதரரிடம் இருந்தும் எந்த ஒரு உதவியும் பயனும் வராமல் போய்விடும். தினமும் விநாயகர் அகவல் படித்து வர வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
4-ம் இடம் சுகஸ்தானம். தாயார், வீடு, வாகன யோகம், கல்வி கால்நடைகள் பற்றிக் கூறுமிடம். சுக வாழ்க்கையில் நாட்டம் உண்டு. சிறிய முயற்சியில் பெரிய நன்மை உண்டு. உழைக்காத வருமானம் உண்டு. தொழிலுக்கு அரச ஆதரவு உண்டு. பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. இவர்களுக்கு விவசாயம், கால்நடை வளர்த்தல், பண்ணை தொழில் ரியல் எஸ்டேட்டும் ஏற்ற தொழில்களாகும். கடினமாக உழைக்க விரும்ப மாட்டார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி அதன் மூலம் ஆதாயம் தேடுவார்கள். சிறிய வேலை செய்து கடுமையாக உழைத்தவர்கள் போல் பாவனை காட்டுவார்கள். உறவுகளின் உழைப்பை, ஆதரவை சார்ந்தே வாழ்வார்கள்.
ஆதாயம் இல்லாத செயலைச் செய்ய விரும்பாதவர்கள். எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். வருமானம் உயர, உயர சுகம் தேடுவதில் அதிக சிந்தனை இருப்பதால் பெரும் முதலீடுள்ள தொழிலில் இருப்பவர்கள் கடுமையான தோல்வியை சந்திக்கிறார்கள்.
இவர்களின் தாய்க்கு அடிக்கடி ஆரோக்கிய குறைபாடு இருக்கும். 10ம் வகுப்பு வரை படிப்பில் ஆர்வம் குறையும். உரிய வயதில் கவனமாக படிக்காமல் பிற்காலத்தில் வருந்துவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். வருமானம் ஏற்ற இறக்கமாக இருக்கும். கால்நடைகளால் பயன் உண்டாகும். ஆனால் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். இவர்கள் அசையும், அசையாச் சொத்து வாங்கும் விற்கும் முயற்சியில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் இவர்களுக்கு வாகனம், சொத்து, படிப்பு சார்ந்த விஷயங்களுக்காக கடன் பெற்றால் திருப்பி அடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் திரும்பச் செலுத்தும் திறன் அறிந்து கடன் பெற வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல் சாற்றி வழிபடவும்.
தொடரும்.....