என் மலர்
வழிபாடு

எதிர்மறை எண்ணங்களை நீக்கி மன அமைதியை தரும் மணி ஓசை
- மனித மூளையானது, வலது, இடது என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.
- மணி ஓசையை கேட்கும் போதே, நம்மை அறியாமல் நம் இரு கரங்கள் இறைவனை தொழுகின்றன.
கோவிலுக்கு செல்லும் நாம் அனைவரும் அங்கு ஒலிக்கும் மணி ஓசையை கேட்டிருப்போம். நம் வேண்டுதலை இறைவன் காதுகொடுத்து கேட்பார் என்பதற்காகவே கோவிலில் மணி அடித்து வழிபடுவதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அது மட்டும் காரணமல்ல. தெய்வீக உணர்வை ஏற்படுத்தும் அந்த மணி ஓசையின் பின்னால் ஒரு அறிவியலும் அடங்கியுள்ளது.
கோவிலில், இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போதும், அபிஷேகம் செய்யும்போதும் மணி அடிப்பார்கள். அப்போது மணியில் இருந்து வெளிப்படும் ஓசையானது, நம்முடைய எதிர்மறை சக்திகளை விரட்டி, நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. கோவில் மணி, ஒரே உலோகத்தால் ஆனதல்ல. குரோமியம், நிக்கல், துத்தநாகம், மாங்கனீசு போன்ற பல வகையான உலோகங்களின் கலவையால் உருவானது. இதனால்தான் மணியில் இருந்து வெளிப்படும் ஓசையானது தனித்துவமாக உள்ளது.
மனித மூளையானது, வலது, இடது என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அந்த இரு பிரிவுகளுமே, இரு வேறு செயல்திறனை கொண்டவை. கோவில் மணியில் இருந்து வரும் ஓசை, இரு பக்க மூளைகளையும் சமநிலைப்படுத்தி, மனதுக்கு அமைதியை ஏற்படுத்துகிறது. மூளையின் செயல்திறனையும் மேலோங்கச் செய்கிறது.
அதுமட்டுமின்றி, பூஜையின்போது மனம் அலைபாயாமல் இறைவன்பால் ஒன்றி இருக்க வேண்டும் என்பதற்காகவும் மணி ஓசையை எழுப்புகிறார்கள். கோவில் வாசலில் இருக்கும் மணியை ஒலிப்பதற்கான கோவிலுக்குள் காரணம், நுழையும்போது ஆழ்மனதை விழிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பதாகும்.
மணி ஓசையை கேட்கும் போதே, நம்மை அறியாமல் நம் இரு கரங்கள் இறைவனை தொழுகின்றன. நைவேத்தியம் செய்யும்போது மணி ஓசையை எழுப்புவது அவசியம் என்கிறது, சாஸ்திரம். ஏனென்றால், மணி ஓசையை கேட்டவுடன் இறைவன் ஓடோடி வந்து நம் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார் என்பது நம்பிக்கை. கோவிலில் இருந்து வரும் நறுமணமும், மணி ஓசையும், தீப ஒளியும் நம்மை ஆன்மிக சிந்தனையுடன், இறைவன்பால் அழைத்துச் செல்கின்றன.






