சிறந்த பக்தன் யார்? - நாரதரின் ஆணவத்தை அடக்கிய மகாவிஷ்ணு

நாரதரின் மனதில் இருந்த ஆணவத்தை அறிந்த மகாவிஷ்ணு, ஒரு திருவிளையாடல் நடத்தி அந்த அகந்தையை அகற்ற முடிவு செய்தார்.
Naradar  - Mahavishnu
Published on

மகாவிஷ்ணு

மகாவிஷ்ணுவின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர், நாரதர். கையில் வீணையுடன் இருக்கும் நாரதர், எங்கு சென்றாலும் எப்போதும் 'நாராயணா நாராயணா' என்று நாராயணரின் நாமத்தையே உச்சரிப்பார்.

ஒரு முறை நாரதருக்கு “நான் எப்போதும் நாராயணரின் திரு நாமத்தை ஜெபித்துக்கொண்டே இருக்கிறேன். எனவே அவருடைய சிறந்த பக்தன் நான்தான். உலகிலேயே என்னைவிட சிறந்த பக்தன் யாரும் கிடையாது” என்ற ஆணவம் ஏற்பட்டது.

நாரதர்

ஒரு சமயம் நாரதர் வைகுண்டம் சென்றபோது, மகாவிஷ்ணுவை பார்த்து “பரந்தாமா.. இந்த உலகில் உங்களின் சிறந்த பக்தன் யார்?” எனக் கேட்டார்.

நாரதரின் மனதில் இருந்த ஆணவத்தை அறிந்த மகாவிஷ்ணு, ஒரு திருவிளையாடல் நடத்தி அந்த அகந்தையை அகற்ற முடிவு செய்தார். எனவே மகாவிஷ்ணு, “பூலோகத்தில் வாழும் ஒரு ஏழை விவசாயிதான் என் சிறந்த பக்தன்” என்றார்.

விவசாய பக்தன்

இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த நாரதர், “எப்போதும் நாராயணர் திருநாமத்தையே ஜெபிக்கும் என்னைவிட ஒரு சிறந்த பக்தன் இருக்க முடியுமா?" என மனதில் நினைத்துகொண்டு, பூலோகத்தில் உள்ள அந்த பக்தனை காண புறப்பட்டார்.

பூலோகத்தில் கடுமையான வறட்சி நிலவிய பகுதியில் ஒரு கிராமத்தில் அந்த விவசாய பக்தன் வாழ்ந்து வந்தான். அந்த ஏழை விவசாயி கடுமையான வெயிலிலும், வறட்சியிலும் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். நாரதர் அவனது நடவடிக்கைகளை உற்று கவனித்தார்.

நாராயணா

காலையில் 'நாராயணா' என்று மகாவிஷ்ணுவின் திருநாமத்தை சொல்லிக்கொண்டு எழும் அந்த விவசாயி, மதிய வேளையிலும், இரவு தூங்குவதற்கு முன்பும் என ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை மட்டுமே ஜெபித்தான். இதைக் கவனித்த நாரதர், மகாவிஷ்ணுவிடம் சென்று, “சுவாமி, நானோ சதா காலமும் உங்களை நினைத்து, உங்களின் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் நாள் முழுவதும் சில முறையே உங்களை நினைத்து ஜெபிக்கும் விவசாயியை சிறந்த பக்தன் எனச் சொல்கிறீர்களே” என்று கேட்டார்.

அதைக் கேட்டு புன்னகைத்த மகாவிஷ்ணு, நாரதரிடம் ஒரு கிண்ணம் நிறைய எண்ணெயை கொடுத்தார். எண்ணெய், கிண்ணத்தின் விளிம்பு வரை நிரம்பி இருந்தது. இந்த கிண்ணத்தில் உள்ள எண்ணெய் ஒரு துளிகூட சிந்தாமல் உலகத்தை சுற்றி வர வேண்டும் என நாரதரிடம் கூறினார்.

எண்ணெய் கிண்ணம்

நாரதரும் அந்த கிண்ணத்தை கையில் ஏந்தி, உலகத்தை சுற்றி வர புறப்பட்டார். பகவான் கூறிய படியே, கிண்ணத்தில் இருந்து ஒரு துளி எண்ணெய்கூட சிந்தாமல் உலகம் முழுவதையும் சுற்றி வந்தார். தனக்கு பகவான் கொடுத்த வேலையை சரியாக செய்ததாக நாரதர் பெருமிதம் கொண்டார். அப்போது மகா விஷ்ணு, “நாரதா.. நீ உலகை சுற்றி வரும்போது, என் நாமத்தை எத்தனை முறை ஜெபித்தாய்” எனக் கேட்டார்.

நாரதர், ஒன்றும் பேச முடியாமல் சிறிது நேரம் மவுனமாக நின்றார். பிறகு, "பகவானே! கிண்ணத்தில் இருந்த எண்ணெய் ஒரு துளிகூட சிந்தக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால், உங்கள் திருநாமத்தை ஜெபிக்க நேரம் கிடைக்கவில்லை” என்று கூறினார்.

நாரதர் ஆணவம் அழிந்தது

உடனே மகாவிஷ்ணு, “நாரதா, ஒரு சிறிய கிண்ணத்தை கையில் வைத்திருக்கும் போதே, நீ என்னை மறந்துவிட்டாய். ஆனால், அந்த ஏழை விவசாயி, வறட்சி, பசி, குடும்பப் பொறுப்பு, வாழ்வாதாரம் என பல துன்பங்களுக்கு மத்தியிலும், தன் கடமைகளை செய்து கொண்டே என்னை மறவாமல், தினமும் என்னை நினைத்து ஜெபிக்கிறான். கடமைகளை துறந்துவிட்டு சதாகாலமும் என்னை ஜெபிப்பவனை விட, எவன் ஒருவன் தன் கடமைகளை செவ்வனே செய்து என்னை நினைக்கிறானோ, அவனே என் சிறந்த பக்தன்” என விளக்கினார். இதைக் கேட்டதும் நாரதரின் ஆணவம் அழிந்தது.

நாம், நம் வாழ்வில் நிகழும் கஷ்டங்கள், துன்பங்கள், சவால்கள் என எல்லா சூழ்நிலையிலும் இறைவனை நினைத்து ஜெபிக்க வேண்டும். நம் கடமைகளை சரியாகவும், நேர்மையாகவும் செய்து இறைவனை வழிபட்டால் இறைவனின் அருள் நமக்கு எப்போதும் இருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com