செல்வ வளம் தரும் விஷ்ணுபதி புண்ணிய காலம்

மகாவிஷ்ணுவை வழிபட உகந்ததாகவும், திதிகளில் சிறப்பானதாகவும் ஏகாதசி திதி உள்ளது.
செல்வ வளம் தரும் விஷ்ணுபதி புண்ணிய காலம்
Published on: 

மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமி தாயாரையும் ஒருசேர வழிபட உகந்த நேரம், விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். இந்த காலமானது, ஜோதிடத்தில் சூரியன் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிவற்றின் மீது சஞ்சாரம் செய்யும் காலகட்டமாக சொல்லப்படுகிறது.

அதன்படி விஷ்ணுபதி புண்ணிய காலமானது, ஒரு வருடத்தில் 4 நாட்கள் மட்டுமே வரக்கூடியதாகும். தமிழ் மாதக் கணக்குப்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களின் முதல் நாளை, 'விஷ்ணுபதி புண்ணிய காலம்' என்கிறோம்.

மகாவிஷ்ணுவை வழிபட உகந்ததாகவும், திதிகளில் சிறப்பானதாகவும் ஏகாதசி திதி உள்ளது. அந்த நாளில் செய்யக்கூடிய பூஜை மற்றும் விரதங்களின் மூலம் கிடைக்கும் பலன்களை விட, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளையும், தாயாரையும் வழிபடும்போது பன்மடங்கு பலன் கிடைக்கும் என்பது ஆன்மிக சான்றோர்களின் குறிப்பு. அதோடு மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி தாயார் ஆகிய இருவரின் அருளையும் முழுமையாகப் பெற முடியும்.

விஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்புக்குரியது, நரசிம்மர் அவதாரம். பக்தர்களின் துன்பங்களை உடனடியாக தீர்த்துவைப்பவர், நரசிம்மர் என்பது நம்பிக்கை. இந்த நரசிம்மரின் அவதார நோக்கம், இரண்யகசிபுவை வதம் செய்வதுடன், பிரகலாதனையும் காப்பாற்றுவதாகும். இரண்யகசிபுவை வதம் செய்தபிறகும், நரசிம்மரின் கோபம் தணியவில்லை. தேவர்களாலும், முனிவர்களாலும் அவர் அருகில் கூட நெருங்க முடியவில்லை.

எனவே அனைவரும் மகாலட்சுமியை அழைத்து, நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்கும்படி வேண்டுகோள் வைத்தனர்.

தாயாரும் அவர்களின் கோரிக்கையை ஏற்று, உக்கிரமாக இருந்த நரசிம்மரின் அருகில் சென்றார். மகாலட்சுமி தேவியின் நிழல் பட்டதுமே நரசிம்மரின் உக்கிரம் தணிந்தது. பின்னர் நரசிம்மரும், மகாலட்சுமியும் இணைந்து, அமைதி தவழும் 'லட்சுமி நரசிம்மர்' தோற்றத்தில் காட்சி தந்தனர். அப்படி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் மகாவிஷ்ணு காட்சி கொடுத்த அந்த நேரம்தான் 'விஷ்ணுபதி புண்ணிய காலம்' ஆகும்.

இந்த காலத்தில் மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் வீட்டிலேயே வழிபட்டு, தேவைகளையும், வேண்டுதல்களையும் சொல்லி வழிபடலாம். துளசியால் அர்ச்சனை, கோ பூஜை மற்றும் மகாலட்சுமிக்குரிய வழிபாடு போன்றவற்றையும் செய்தால், மேலும் சிறப்பான பலன்கள் வந்துசேரும். ஒரு முறை விஷ்ணுபதி புண்ணிய கால விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், பல ஏகாதசி விரதங்களை கடைப்பிடித்த பலன்களைப் பெறுவார்கள். அதேபோல் ஒரு வருடத்தில் வரும் 4 விஷ்ணுபதி புண்ணிய கால விரதத்தையும் மேற்கொண்டால், எண்ணிலடங்காத நற்பலன்களைப் பெற முடியும்.

அன்றைய தினம் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று, விஷ்ணுவையும், லட்சுமி தேவியையும் வழிபடுவதோடு, ஆலயத்தைச் சுற்றி 27 முறை வலம் வந்து வழிபட வேண்டும். அதன் பலனாக அடுத்து வரும் மூன்று விஷ்ணுபதி புண்ணிய காலமும் முடிவதற்குள், உங்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.

மகாவிஷ்ணுவை வணங்கக்கூடிய 'விஷ்ணுபதி புண்ணிய காலம் நாட்களைப் போலவே, சிவபெருமானை வழிபடும் 4 நாட்களும், பிரம்மாவை வழிபடும் 4 நாட்களும் இருக்கின்றன. ஸ்திர ராசிகளின் மீது சூரியன் சஞ்சரிக்கும்போது ஏற்படுவது 'விஷ்ணுபதி புண்ணியகாலம்'. அதே போல் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை 'ஷடசீதி புண்ணிய காலம்' என்பார்கள். இது 'ஷடங்கன்' என்னும் பெயர் கொண்ட சிவபெருமானுக்கான வழிபாட்டு காலமாகும்.

ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களின் முதல் நாள், 'ஷடசீதி புண்ணிய காலம்' ஆகும். அந்த வகையில் பிரம்மாவை வழிபடுவதற்குரிய 4 நாட்களை, 'விஷூ புண்ணிய காலம்' என்பது வழக்கம். சூரியன், சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளின் மீது சஞ்சரிக்கும் காலம் இவை. அதன்படி சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய மாதங்களின் முதல் நாள், பிரம்மாவுக்கு உரியவை.

X