வெற்றிகளை குவிக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

விநாயகப் பெருமானிடம் “நான் நீராடும் வரை யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது” என கட்டளையிட்டார்.
vinayagar
Published on

விநாயகப் பெருமான்

'விநாயகர்' என்றாலே 'மேலான தலைவர்' என்று பொருள். வேண்டிய வரங்களை அள்ளித் தருபவர், விநாயகப் பெருமான். இந்து சமயத்தில் முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை போற்றி வழிபடுவதற்கு மிகவும் உகந்த திருநாள், விநாயகர் சதுர்த்தி ஆகும்.

வளர்பிறை சதுர்த்தி

ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே 'விநாயகர் சதுர்த்தி' திருவிழாவாக இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவில்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும், பொதுமக்கள் ஒன்றாகக்கூடும் இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து விமரிசையாக வழிபடப்படுவது இந்நாளின் சிறப்பாகும்.

பார்வதி தேவி

விநாயகர் அவதாரம் குறித்து பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன.

ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் இல்லாதபோது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது பார்வதி தேவி, தன்னுடைய உடலில் இருந்து வாசனை துகள்களை உருட்டி ஒரு உருவத்தை உருவாக்கினார். பின்னர், அதற்கு தன்னுடைய சக்தியால் உயிரூட்டிய பார்வதி தேவி, காவலுக்கு வைத்தார். அவரே விநாயகப் பெருமான். பார்வதி தேவி, விநாயகப் பெருமானிடம் “நான் நீராடும் வரை யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது” என கட்டளையிட்டார்.

சிவபெருமான்

அந்த வேளையில் கயிலாயத்திற்குள் நுழைந்த சிவபெருமானை விநாயகர் தடுத்தார். இதனால் சிவபெருமானுக்கும், விநாயகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இறுதியில் சிவபெருமான், தன்னுடைய திரிசூலத்தால் விநாயகரின் தலையை வெட்டினார். அப்போது நீராடிவிட்டு வந்த பார்வதி தேவி, தன் மகனான விநாயகரின் நிலையைக் கண்டு அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார்.

யானை முகம்

உலகையே அழித்துவிடும் அளவுக்கு அவரது கோபம் பெருகியது. இதனால் தேவர்கள், சிவபெருமானிடம் பார்வதி தேவியை சமாதானப்படுத்தும் படி வேண்டினர். உடனே சிவபெருமான், வடக்கு திசையில் முதலில் தென்படும் உயிரினத்தின் தலையை கொண்டுவரும்படி தன்னுடைய கணங்களுக்கு ஆணையிட்டார். இதையடுத்து வடதிசையில் தலை வைத்திருந்த வெள்ளை யானையின் தலையை கணங்கள் கொண்டு வந்தனர். பின்னர் சிவபெருமான், யானை தலையை விநாயகரின் உடலில் பொருத்தி உயிர் கொடுத்தார்.

கணபதி

இதைக் கண்டு பார்வதி தேவி சாந்தமானார். இவ்வாறு தான் விநாயகருக்கு யானை முகமும், மனித உடலும் கிடைத்தது. பின்னர் சிவபெருமான், விநாயகரை கணங்களின் தலைவனாக நியமித்தார். இதனால் விநாயகர் 'கணபதி' என அழைக்கப்படுகிறார்.

சத்ரபதி சிவாஜி

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் மாதம் 14-ந் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி காலத்தில் இருந்தே கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் சுதந்திரப் போராட்ட வீரரான பாலகங்காதர திலகர், விநாயகர் சதுர்த்தியை ஒரு பெரும்விழாவாக மாற்றியமைத்தார். ஆங்கிலேயர் ஆட்சியின்போது, தேசிய உணர்வை வளர்ப்பதற்காக இந்த விழாவை பயன்படுத்தினார்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி என்பது வெறும் மத வழிபாட்டு விழா மட்டுமல்ல. இது சமூக ஒருமைப்பாடு, கலாசார பரிமாற்றம், சமூக சேவை போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்வாகும். இவ்விழாவின்போது, மக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் மண் சிலைகளை நிறுவி வழிபடுவார்கள். விழாவின் இறுதி நாளில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல்களிலும், அருகில் உள்ள நீர் நிலைகளிலும் கரைக்கப்படும். இதன்மூலம் நம்முடைய கவலைகளும், கஷ்டங்களும் நீரில் கரைவது போல கரைந்துவிடும், வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, விநாயகருக்கு அருகம்புல், எருக்கம்புல் சாற்றி, மோதகம், சுண்டல், அவல், பொரி, தேங்காய் போன்றவை படைக்க வேண்டும். அன்றைய தினம் விநாயகர் மந்திரங்கள், விநாயகர் கவசம், விநாயகர் அகவல் படித்து வழிபடுவது சிறந்தது. விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை மனதார வழிபடுபவர்களுக்கு வினைகள் தீர்ந்து இனிமையான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

X

Maalai Malar
www.maalaimalar.com