

ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு மலர் விசேஷமாக கருதி படைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, அனுமனுக்கு வெற்றிலை, அம்மனுக்கு வேப்பிலை. அதுபோல விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்ததாக அருகம்புல் கருதப்படுகிறது.
முன்னொரு காலத்தில் அனலாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன், தன் உடலில் இருந்து நெருப்பை கக்கி, தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தினான். இதனால் கவலை அடைந்த தேவர்கள், விநாயகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர்.
இதையடுத்து தேவர்களின் வேண்டுகோளை ஏற்று விநாயகர், அனலாசுரனுடன் போரிட்டார். விநாயகர் ஏவிய அனைத்து ஆயுதங்களையும் அனலாசுரன் நெருப்பை பயன்படுத்தி சாம்பலாக்கினான். இதனால் விநாயகப் பெருமான், அனலாசுரனை சிறிய உருவாக மாற்றி அப்படியே விழுங்கிவிட்டார். ஆனால் அனலாசுரனின் வெப்பத்தால் விநாயகரின் வயிறு எரிச்சலடைந்தது. இதனால் விநாயகர் வேதனை அடைந்தார்.
இதையடுத்து தேவர்கள் அனைவரும் விநாயகரை குளிர்விக்க முயன்றனர். வருண பகவான், மழை பொழிந்தார். இந்திரன், சந்தனம் பூசினார். அன்னை பார்வதி, பாற்கடலை விநாயகர் பக்கம் திருப்பிவிட்டார். சிவபெருமான் குளிர்ச்சியாக இருக்கும் பாம்பை விநாயகரின் இடுப்பை சுற்றிக் கட்டினார். ஆனால் அவர்கள் அனைவரது முயற்சியும் எந்த பலனும் தரவில்லை.
இதையடுத்து தேவர்கள், காஷ்யப முனிவரின் உதவியை நாடினர். காஷ்யப முனிவர், 21 அருகம்புல்லை விநாயகரின் தலையில் வைத்தார். உடனேயே விநாயகரின் உடல் வெப்பம் தணிந்தது. விநாயகப் பெருமான் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அன்று முதல் விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பிடித்தது.
மற்றொரு புராணக்கதைபடி, யாஷினி தேவி என்ற தேவலோக மங்கை, விநாயகரை திருமணம் செய்ய விரும்பி, தவம் இருந்தார். ஆனால் இதற்கு விநாயகர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், யாஷினி தேவியின் அன்பையும், பக்தியையும் மெச்சிய விநாயகர், தனக்கு விருப்பமான பொருளான அருகம்புல்லாக மாறி தன்னுடனே இருக்கும்படி வரம் அளித்ததாக கூறப்படுகிறது.
ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதி தேவியும் தாயம் விளையாடியபோது, நடுவராக நந்தி பகவான் இருந்தார். அப்போது நந்தி பகவான், சிவனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பார்வதி நந்திக்கு சாபம் இட்டார். பின்னர் விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகருக்கு உகந்த பொருளை சமர்ப்பித்து வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார். பின்னர் நந்தி, விநாயகருக்கு அருகம்புல் படைத்து சாப விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.
உலகிலேயே முதலில் தோன்றிய மூலிகைகளில் ஒன்றாக அருகம்புல் உள்ளதாக கூறப்படுகிறது. அருகம்புல் எல்லா காலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. மழை இல்லாவிட்டாலும், கடுமையான கோடை நிலவினாலும் அருகம்புல் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தாலும் மீண்டும் துளிர்விடும். பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும், அருகம்புல் அளப்பரிய மருத்துவ குணம் கொண்டது.
குளர்ச்சி நிறைந்த அருகம்புல் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. வயிற்றுப் புண், செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இவ்வாறு எண்ணற்ற பலன்களை தரும் அற்புத மூலிகையாக அருகம்புல் திகழ்கிறது.
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று, அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் விநாயகர் அருளையும், பொருளையும் அள்ளித் தருவார். மனக் கவலையை நீக்கி மன மகிழ்ச்சி அருள்வார்.