சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்த படம்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதலும், தொடர்ந்து பள்ளியறை திறத்தலும், 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடி பட்டத்துடன் தலைமை பதியை சுற்றி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 6 மணிக்கு அய்யா வழி பக்தர்களின், ‘அய்யா சிவசிவ அரகர அரகரா‘ என்ற பக்தி கோ‌‌ஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியை பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். ராஜவேல், பால லோகாதிபதி, வக்கீல் யுகேந்த், டாக்டர் வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மமும் இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) இரவு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல் நடக்கிறது.

24-ந் தேதி மாலை 6 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலி வேட்டையும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

27-ந் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா ரி‌‌ஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், பகலில் உச்சிபடிப்பும், இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்ன தர்மமும், கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com