கம்பீரமாக தோற்றமளிக்கும் சூரியநாராயண சுவாமி

தினசரி பூஜைகள், நாளொன்றுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் நடைபெறுகின்றன.
surya narayanar
Published on

ஒவ்வொரு ஆரம்பகால நாகரிகமும் சூரியனின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தன. இயற்கையின் அந்த மாபெரும் சக்தியைப் போற்றி வணங்குவதற்கான வழிகளையும், முறைகளையும் அவர்கள் கண்டறிந்திருந்தனர். இந்து சமயத்தில் சூரியனின் சிறப்பை உணர்ந்து, தெய்வமாகப் போற்றி வந்துள்ளனர்.

காலங்காலமாக சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப் புகழ்பெற்ற கோவில்கள் அமைந்துள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு கிழக்கு பெங்களுருளின் டோம்லூர் பகுதியில் சூரியக் கடவுளுக்காக மிகவும் கலைநயமிக்க ஒரு கோவில் கட்டப்பட்டது.

கோவில் பிரகாரம்

அமைதியான குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள அமைந்துள்ள இக்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இது சோழர் கால கட்டிடக்கலை பாணியிலான கோபுரத்தைக் கொண்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள் நுழையும்போது, பாரம்பரியமான கொடிமரத்தைக் காணலாம். சற்று முன்னே சென்றால், சீரான வடிவில் அமைக்கப்பட்ட சிறிய படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளில் மேலே ஏறும்போது தேர் வடிவிலான அழகான கோவில் காட்சி அளிப்பதை காண முடியும். அந்தக் கல் தேர் ஒரு சுவாரசியமான கண்ணாடிப் பூச்சைக் கொண்டுள்ளது. அதன் வழியாக ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமன் ஆகியோரின் சிலைகளைக் காணலாம்.

இந்தத் தேருக்கு நேர் முன்பாகவே முதன்மை தெய்வத்திற்கான கருவறை அமைந்துள்ளது. கருவறையில், ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமர்ந்திருக்கும் சூரிய பகவானின் மூன்றரை அடி உயரத்தியான சிலையைக் காணலாம். மூலயர் பத்ரிநாத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர். இவர் மிகவும் ஒளிமயமாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார்.

தினசரி பூஜைகள், நாளொன்றுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் நடைபெறுகின்றன. இது தவிர, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மற்றும் சூரிய நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

சூரியநாராயண சுவாமியின் தரிசனம் கிடைத்த பிறகு, நம் கோவிலை வலம் வரலாம். கோவிலில் இரண்டு வரிசை பிரதட்சணப் பாதைகள் உள்ளன. பிரதட்ணத்திற்கான உட்பாதை முதன்மைச் சன்னிதியைச் சுற்றி அமைந்துள்ளது.சூரியக் கடவுளின் சன்னிதியைச் சுற்றியுள்ள மூன்று சுவர்களில் முறையே பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இம்மும்மூர்த்திகளின் இருபுறமும் யானைகள், குதிரைகள் மற்றும் தேவதைகள் போன்ற உருவங்களின் அழகிய சிற்பங்கள் வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ளன.

பிரதட்சண பாதை நான்கு அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. விநாயகர், வைஷ்ணவி, உக்ர நரசிம்மர், சரஸ்வதி, ஷேஷசாயி ஆகியோருக்கு சிறிய சன்னிதிகள் உள்ளன. அவர்கள், பிரதட்சணத்தின் உள்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். வெளிப்புற பிரதட்சணப் பாதையின் சுவர்களில் புராணக் கதைகளை விவரிக்கும் பெரிய அளவிலான ஓவியங்கள் உள்ளன. கோவிலின் ஒவ்வொரு தூணும் காலத்தால் அழியாத உருவங்களின் சிற்பங்களைத் தாங்கியுள்ளது.

இந்த வலம் நிறைவடைந்ததும், நலக்கிரகங்களுக்கான ஒரு பெரிய சன்னிதியை அடையலாம். அங்கு ஒவ்வொரு கிரகமும் தங்கள் தேவியருடன் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர் கோவில் தரிசனத்தை முடித்த பிறகு, அமைதியான மற்றும் தூய்மையான வளாகத்தில் ஓய்வெடுக்கலாம்.

இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக, மாசி மாதத்தில் நடைபெறும் எட்டு நாள் திருவிழாவான பிரம்மோற்சவத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிகரித்து வரும் கூட்டத்திற்கு மத்தியிலும் 'சுத்தம் இறைத்தன்மைக்கு இணையானது' என்ற கோட்பாடு, இக்கோவிலில் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.

பெங்களூருவில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இந்திராநகர் மெட்ரோ நிலையத்தில் இருந்து வெறும் பத்துநிமிடத் தொலைவில் உள்ளதால், எளிதாகச் செல்ல முடிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com