

கோவில்களில் சிவபெருமான் பல வடிவங்களில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அவ்வாறு சிவபெருமான் அபூர்வ தோற்றமாக தலைகீழாக காட்சி தரும் அற்புத ஆலயம் ஒன்று உள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அருகே உள்ளது, யானமத்துரு என்ற ஊர். இங்கு சக்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மரிடம் இருந்து பல வரங்களை பெற்றான். அதைக்கொண்டு தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் துன்புறுத்தினான். அஷ்டதிக் பாலகர்களில் எமனை தவிர அனைவரையும் தோற்கடித்தான். எமன், தனது பலத்தால் கடுமையாக போர் புரிந்தார். இருப்பினும் சம்பாசுரன் எமனையும் தோற்கடித்து எமபுரியை கைப்பற்றினான்.
இதையடுத்து எமன், சிவபெருமானை நோக்கி தவம் இயற்றினார். அப்போது இறைவன், தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில்
சிரசாசனத்தில் இருந்தார். சிவனின் தியானம் கலைய வழி அறியாது நின்ற எமனின் நிலையை அறிந்த பார்வதி தேவி, எமனுக்கு காட்சி அளித்து அசுரனை அழிக்கும் சக்தியை வழங்கினார். எமனும் சம்பாசுரனை அழித்து, சிரசாசனத்தில் இருந்த சிவனையும், குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார். இதனால்தான் இங்கு இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாக காட்சி தருகிறார்.
கோவில் கருவறையில், சிவலிங்க தோற்ற கல்லின் மீது ஜடா முடியுடன் கூடிய சிவபெருமானின் உருவம் தலைகீழாக செதுக்கப்பட்டுள்ளது. தியான கோலத்தில் இருப்பது போல, கண்களை மூடிக்கொண்டு, ஈசனின் தலைப் பகுதி கீழேயும், கால் பகுதி மேலேயும் அமைந்திருக்கிறது. அருகில், குழந்தை முருகனை மடியில் கிடத்தி வைத்தபடி பார்வதி தேவி காட்சி தருகிறார். இந்த இறைவனையும், அம்பாளையும் வழிபட்டால் குடும்ப ஒற்றுமை பலப்படும். எமன் பூஜித்த தலம் என்பதால் எம பயம் விலகும், சகல பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.