லேசர், அலங்கார ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரங்கள்

கடந்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் மாலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
லேசர், அலங்கார ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரங்கள்
Published on
Summary

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் ஏற்கனவே பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வானுயர்ந்த கோபுரங்கள், அதில் இருக்கும் ஆயிரக்கணக்கான சுதை சிற்பங்களை பக்தர்கள் வியப்புடன் கண்டு களித்து வருகின்றனர்.

அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் ஜோசப் விஜய் சீர்மிகு நல்லாட்சியில், தொன்மையான கோவில்களைப் பழமை மாறாமல் புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குட முழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நாளை மறுநாள் 17-ந்தேதி அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவினை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்படக் கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் எதிர்புறம் அமைந்துள்ள புதுமண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு நுழைவு வாயிலில் தண்ணீர், பிஸ்கெட் உடன் கூடிய பிரசாதப்பை வழங்கப்பட உள்ளது. அனைத்து பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருக்குடமுழுக்கினை காண வரும் பக்தர்களுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய மருத்துவ உதவி மையங்கள் மற்றும் முகாம்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை தேவைப்படும் பக்தர்களுக்கு 108 அவசர ஊர்திகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் எல்.இ.டி.வண்ணத்திரைகள் பக்தர்கள் திருக்குட முழுக்கினைக் காண்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் பரிவாரமூர்த்திகளுக்கான திருக்குடமுழுக்கு நாளை (16 -ந்தேதி) காலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து 17 -ந்தேதி அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள் சமகாலக் குடமுழுக்கும், மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் கலசாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

இக்குடமுழுக்கு பெருவிழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏக்கள், தவத்திரு ஆதீன பெருமக்கள், கோவில் அறங்காவலர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜகோபுரங்கள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் ஏற்கனவே பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வானுயர்ந்த கோபுரங்கள், அதில் இருக்கும் ஆயிரக்கணக்கான சுதை சிற்பங்களை பக்தர்கள் வியப்புடன் கண்டு களித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கோவிலுக்குள் பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம், நூறு கால் மண்டபம், அம்மன் பிரகாரம், சுவாமி பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது.

இதனை காண காலை மற்றும் மாலை நேரங்களில் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் நகரில் எந்த பகுதிகளில் இருந்தும் வானுயர கோபுரங்களை பார்க்கும் வகையில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. அது மட்டுமின்றி கோபுரத்தில் இருந்து பொதுமக்களை கவரும் வகையில் லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டு ஒளி பாய்ச்சப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

அதேபோல் கோவில் உள்ளேயும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் இதற்காக குழந்தைகளுடன் பக்தர்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

கடந்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் மாலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com