வருகிற 17-ந்தேதி மகா கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோவிலில் 182 குண்டங்களில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள்

கும்பாபிஷேகத்திற்காக கங்கை, வைகை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து புனித நீரையும், புனித கிணறுகளில் இருந்து நீர் எடுத்துவருதலும் நடந்தது.
வருகிற 17-ந்தேதி மகா கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோவிலில் 182 குண்டங்களில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள்
Published on
Summary

வருகிற 17-ந்தேதி காலை தான் உச்சகட்டமாக யாகசாலையில் உள்ள புனித நீர் நிரம்பிய கலசங்கள், சிவாச்சாரியார்களின் தோளில் சுமந்து, மேள தாளத்துடன் கோபுர உச்சிக்கும், கருவறை விமானத்திற்கும் கொண்டு செல்லப்படும். காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி அம்மன் விமானம், சுந்தரேஸ்வரர் விமானம், ராஜகோபுர கலசங்களில் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 17-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று ஆகம விதிகள் கூறியபோதும், கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உருக்குலைந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. அதன் காரணமாக கும்பாபிஷேக பணிகள் தள்ளிப்போனது.

இந்தநிலையில் தற்போது ரூ.32.28 கோடி மதிப்பீட்டில் மீனாட்சி அம்மன் கோவிலில் 186 வகையான திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 6-ந்தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மறுநாள் முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி வடக்கு ஆடி வீதியில் 182 யாக குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் சுழற்சி முறையில் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகளை மேற் கொண்டு வருகிறார்கள். அதில் முதல் நாளில் மூலவர் மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு பாலாலயம் செய்யப்பட்டது. அதாவது, மூலவர்களின் சக்தியை தற்காலிகமாக கும்பங்களில் எழுந்தருளச் செய்து, பாலாலய மூர்த்திகளுக்கு பூஜை நடக்கும். இதன் பின் கருவறையில் திருப்பணி, மருந்து சாற்றுதல் தொடங்கியது.

2-ம் நாளில் யாகசாலைக்கு காவலாக விநாயகர் பூஜை, நவக்கிரக ஹோமம், முளைப்பாலிகை வளர்த்தல், மண்ணில் 9 வகை தானியங்கள் முளைக்க வைக்கும் அங்குரார்ப்பணம் நடந்தது.

3-ம் நாள் முதல் 10-ம் நாள் வரை கும்ப ஸ்தாபனம் மற்றும் ஹோமங்கள் நடைபெறும். இது தான் முக்கிய கட்டம். 182 குண்டங்களில் 182 சிவாச்சாரியார்கள் அமர்ந்து, ஒவ்வொரு குண்டத்திற்கும் ஒரு தெய்வத்தை ஆவாகனம் செய்து வருகிறார்கள். இதில் மூல குண்டம்-மீனாட்சி அம்மனுக்கு, பிரதான குண்டம்-சுந்தரேஸ்வரருக்கு, மற்ற குண்டங்கள்-415 பரிவார தெய்வங்களுக்கு, 14 கோபுர கலசங்களுக்கு என பிரிக்கப்பட்டுள்ளது.

3-ம் நாளான நேற்று யாகசாலையில் மூர்த்தி, சாந்தி, ஸம்ஹிதா ஹோமங்கள் நடைபெற்றது. 4-ம் நாளான இன்று காலை தீர்த்த சங்கிரஹணம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக கங்கை, வைகை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து புனித நீரையும், புனித கிணறுகளில் இருந்து நீர் எடுத்துவருதலும் நடந்தது.

ஒவ்வொரு நாளும் வேத பாராயணம், ருத்ர ஜபம், தேவாரம், 108 தாமரை, 1008 சங்கு பூஜை என மந்திர ஒலி ஓயாமல் ஒலித்து வருகிறது. 11-ம் நாளான வருகிற 16-ந்தேதி, முதலில் 415 பரிவார தெய்வங்களான முக்குறுணி விநாயகர், சித்தி விநாயகர், துர்க்கை, முருகன் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கும்.

இதையடுத்து 12-ம் நாள் மகா பூர்ணாஹூதி மற்றும் கடம் புறப்பாடும், 17-ந்தேதி காலை தான் உச்சகட்டமாக யாகசாலையில் உள்ள புனித நீர் நிரம்பிய கலசங்கள், சிவாச்சாரியார்களின் தோளில் சுமந்து, மேள தாளத்துடன் கோபுர உச்சிக்கும், கருவறை விமானத்திற்கும் கொண்டு செல்லப்படும். காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி அம்மன் விமானம், சுந்தரேஸ்வரர் விமானம், ராஜகோபுர கலசங்களில் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

அன்று முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. யாகசாலை பூஜையின் இறுதி 6 நாட்கள் மூலவர் சன்னதிகளில் மருந்து சாற்றுதல், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கும் என்பதால் பக்தர்களுக்கு தரிசனம் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கும்பாபிஷேக திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் கோவிலுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com