மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: இன்று இரவு மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் வீதி உலா

நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரரை தரிசனம் செய்தனர்.
Meenakshi amman temple Kumbhabhishekam
Published on

மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில்

மதுரையில் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானது மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில். இங்கு வானுயர எழுந்து நிற்கும் 4 ராஜகோபுரங்களும், அதனை சுற்றியுள்ள 4 மாசி வீதிகளும்தான் மாநகரின் அடையாளமாக இருக்கிறது.

மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ரூ.32 கோடி மதிப்பீட்டில் 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பூர்வாங்க பூஜைகள்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பணிகள் நிறைவடைந்ததையொட்டி 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவிற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 6-ந்தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து 1,008 லிட்டர் புனிதநீர் சேகரிக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 11-ந்தேதியில் இருந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின.

யாக வேள்வி

கோவிலில் உள்ள வடக்காடி வீதியில் 56 யாகசாலைகள் மற்றும் 186 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. இதில் மூலவர்கள் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் ஆகியோருக்கு தனித்தனியாக பிரம்மாண்டயாக குண்டங்கள் புனிதநீர் அடங்கிய தங்க குடங்களுடன் வைத்து பூஜைகள் நடந்தன. சுமார் 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வேதமந்திரங்கள் முழங்க யாக வேள்விகளை நடத்தினர்.

பிரம்மாண்ட மாலைகள்

கும்பாபிஷேக விழாவிற்காக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து 50 டன் மலர்கள் கொண்டு வரப்பட்டு மாலைகள் தொடுக்கப்பட்டன. 40 முதல் 160 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மாலைகள் கட்டப்பட்டு ராஜகோபுரங்கள் உள்ளிட்ட சிறிய கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு சூட்டப்பட்டன.

பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு

நேற்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் உள்ள சித்தி விநாயகர், சோமாஸ் கந்தர், ஊர்த் தாண்டவ மூர்த்தி, முக்குறுணி விநாயகர், காளி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட 414 பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகம்

இதையடுத்து இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு 5.45 மணிக்கு தொடங்கியது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து காலை 7.35 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் ஒரே நேரத்தில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களின் கோஷம் விண்ணதிர கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Meenakshi amman temple Kumbhabhishekam

மூலவர் சன்னதி

பின்னர் மூலவர் மீனாட்சி அம்மன் சன்னதி விமான கலசத்திற்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேசுவரர் சன்னதி விமான கலசத்திற்கு காலை 8.20 மணிக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

மகா தீபாராதனை

அதன் பிறகு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடந்தது. அப்போது மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் கோவில் மேல் தளங்கள் மற்றும் கோவிலை சுற்றி திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது டிரோன் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை பக்தர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் கோவிலுக்குள் பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரரை தரிசனம் செய்தனர்.

வீதி உலா

இன்று கோவில் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கும்பாபிஷேகத்தை அருகில் இருந்து காண முடியாத பக்தர்கள் நலன் கருதி இரவு 7 மணிக்கு 4 மாசி வீதிகளிலும் மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 6,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com