

சென்னை:
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மற்றும் உயர் பதவிகள் காரணமாக நாடு முழுவதும் 475 முக்கியப் பிரமுகர்களுக்கு “இசட்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மேலும் பலர் தங்களுக்கு “இசட்” பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து “இசட்” பிரிவு பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு ஆய்வைத் தொடங்கியுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது “இசட்” பிரிவு பாதுகாப்பு பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எனவே “இசட்” பிரிவு பாதுகாப்பை யார்- யாருக்கு தொடர்ந்து வழங்கலாம் என்ற ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிறைய வி.வி.ஐ.பி.க்கள் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி “இசட்” பிரிவு பாதுகாப்பை பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு தற்போதும் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் நீடிக்கிறதா? என்று அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.
பீகார் முன்னாள் முதல்- மந்திரி லல்லுபிரசாத் யாதவ் அந்த அடிப்படையில்தான் “இசட்” பிரிவு பாதுகாப்பை பெற்றிருந்தார். அவருக்கான பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அதுபோல பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோரது “இசட்” பிரிவு பாதுகாப்பும் நீடிக்குமா? என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு “இசட்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். எனவே கருணாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் “இசட்” பிரிவு பாதுகாப்பை ரத்து செய்வது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
மத்திய அரசு அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற சிலருக்கும் “இசட்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றையும் திரும்பப் பெற கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் யார்- யாருக்கு “இசட்” பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளது.
அதற்கு பதில் புதிய வி.வி.ஐ.பி.க்களுக்கு “இசட்” பிரிவு பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.