வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்டதால் பெட்ரோல் கேனுடன் வருவாய் அலுவலகம் வந்த வாலிபர்

பழனி அருகே வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்டதால் வருவாய் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வாலிபர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாரிசு சான்றிதழ் கேட்டு பெட்ரோல் கேனுடன் வருவாய் அலுவலகம் வந்த வாலிபரை படத்தில் காணலாம்.
வாரிசு சான்றிதழ் கேட்டு பெட்ரோல் கேனுடன் வருவாய் அலுவலகம் வந்த வாலிபரை படத்தில் காணலாம்.
Published on

பழனி:

பழனியை அடுத்த ஆயக்குடியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கான சாதி, வருமானம் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஆயக்குடி வருவாய் ஆய்வாளர் அலுவலக நுழைவு பகுதியில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் நிற்பதாக ஆயக்குடி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணையில் அவர், ஆயக்குடியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 35) என்றும், அவர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்ததாகவும், அதற்கு வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டதாகவும் கூறினார். இதையடுத்து பெட்ரோல் கேனுடன் மனு கொடுப்பதற்கு வரக்கூடாது என்றும், வாரிசு சான்றிதழ் குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து பழனி தாசில்தார் பழனிச்சாமியிடம் கேட்டபோது, இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com