பாஜக தொண்டர்களை எடியூரப்பா பலி கொடுக்கிறார்: டி.கே.சிவக்குமார்

ஆர்.ஆர்.நகர் தொகுதியில் உள்ள பா.ஜனதா தொண்டர்களை முதல்-மந்திரி எடியூரப்பா பலி கொடுக்கிறார் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்
Published on

பெங்களூரு :

பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னா, காங்கிரசில் இருந்த போது, அவர் மீது பா.ஜனதா சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை தற்போது பா.ஜனதாவினர் திரும்ப பெற்றுள்ளனர். பா.ஜனதாவில் சேர்ந்தால், வழக்குகளை திரும்ப பெறுவதாக கூறியதால் தான் அவர் காங்கிரசில் இருந்து விலகினார். தற்போது முனிரத்னாவின் வெற்றி பெற வைக்கவும், அவருக்கு பதவி, அதிகாரம் வழங்கவும், ஆர்.ஆர்.நகர் தொகுதியில் உள்ள பா.ஜனதா தொண்டர்களை முதல்-மந்திரி எடியூரப்பா பலி கொடுக்கிறார்.

காங்கிரஸ் கட்சி எந்த சூழ்நிலையிலும் சாதி அரசியல் செய்ததில்லை. எடியூரப்பா சாதி அரசியல் செய்ததில்லை என்று கூறி வருகிறார். பெலகாவியில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் லிங்காயத் சமுதாயத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாக கூறி வாக்கு சேகரித்ததை மறந்து விடக்கூடாது. இதற்காக எடியூரப்பாவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீசு கூட வழங்கியது. தற்போது காங்கிரஸ் கட்சி சாதி அரசியலில் ஈடுபடுவதாக பொய் குற்றச்சாட்டு கூறி மக்களை திசை திருப்ப எடியூரப்பா நினைக்கிறார். சாதி அரசியலில் ஈடுபடுவது யார்? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com