

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியினரால் வெடித்த வன்முறையில் ஆளும் கட்சியை சேர்ந்த இரு தலைவர்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். முகமது யூனுஸ் உடைய மூதாதையர் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கடந்த 2024 இல் மாணவர் போராட்டத்தால் கவிழ்ந்தது.
ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்த நிலையில் மாணவர் போராட்டங்களை ஒடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாக கருதப்பட்டு டாக்காவில் உள்ள சர்வதேச தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இதனிடையே வங்கதேசத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் நடந்த இடைக்கால ஆட்சியின்போது அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலில் வென்று பதவியேற்ற தாரிக் ரகுமான் ஆட்சியிலும் அந்த தடை தொடர்ந்து வருகிறது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் இந்தியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தனக்கு எது நேரிலும் அடுத்த டிசம்பரில் தான் வங்கதேசம் திரும்ப உள்ளதாக ஷேக் ஹசீனா கூறியிருந்தார்.
இதனிடையே ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட அவரின் அவாமி லீக் கட்சியினரால் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ளது. பல பகுதிகளில் நடந்த மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
கச்சா வெடிகுண்டுகளை பயன்படுத்தி தலைநகர் டாக்காவில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், சட்டோகிராமில் முன்னாள் இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் மூதாதையர் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். பல பகுதிகளில் உள்ள வங்கிகளும் தாக்கப்பட்டன.
மேற்கு நாரைல் மாவட்டத்தில் அவாமி லீக் தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் ஆளும் வங்கதேச தேசியவாத கட்சியின் (பி.என்.பி) இரண்டு உள்ளூர் தலைவர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் சுமார் 28 மாவட்டங்களில் 12க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. பல வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டாக்காவில் அவாமி லீக் கட்சியை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் நூருல் இஸ்லாம் நஹீத் உட்பட மொத்தம் 565 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலவரங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது எக்காரித்துள்ளார்.
மறுபுறம், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தாரிக் ரகுமான், அவாமி லீக்கை ஒரு பயங்கரவாத அமைப்பு என வர்ணித்தார்.
நாட்டில் பாசிச சக்திகள் மீண்டும் எழுச்சி பெறுவதைத் தடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.