தாரிக் ரஹ்மான் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: மீண்டும் ஒலித்த இந்திய எதிர்ப்பு முழக்கம்!

"டெல்லி நா டாக்கா" அதாவது டெல்லியின் ஆதிக்கமா அல்லது டாக்காவின் மேலாதிக்கமா என்ற முழக்கம் மீண்டும் எழுப்பப்பட்டது.
Tarique Rahman
Published on: 
Summary

டாக்காவில் உள்ள தேசிய அருங்காட்சியகம் முன்பு நடைபெற்ற இந்தத் திரளான மக்கள் கூட்டத்தில், வெறும் உள்நாட்டுப் பிரச்சனைகள் மட்டுமல்லாமல் மீண்டும் பழைய இந்தியா எதிர்ப்பு அரசியலும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானின் அரசுக்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான மின்வெட்டு போன்ற உள்நாட்டுப் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தேசிய குடிமக்கள் கட்சி ஏற்பாடு செய்த மாபெரும் கண்டனப் பேரணியில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாரிக் ரஹ்மான் அரசுக்கு எதிர்ப்பு

பங்களாதேஷில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவர் எழுச்சிக்குப் பிறகு உருவான தேசிய குடிமக்கள் கட்சி, தற்போது தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மான் அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக, நாட்டில் நிலவி வரும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் நீண்ட நேர மின்வெட்டு போன்ற கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வு காணத் தவறியதாகக் கூறி உள்துறை மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று தேசிய குடிமக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

டெல்லி நா டாக்கா

டாக்காவில் உள்ள தேசிய அருங்காட்சியகம் முன்பு நடைபெற்ற இந்தத் திரளான மக்கள் கூட்டத்தில், வெறும் உள்நாட்டுப் பிரச்சனைகள் மட்டுமல்லாமல் மீண்டும் பழைய இந்தியா எதிர்ப்பு அரசியலும் கையில் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் "டெல்லி நா டாக்கா" அதாவது டெல்லியின் ஆதிக்கமா அல்லது டாக்காவின் மேலாதிக்கமா என்ற முழக்கம் மீண்டும் எழுப்பப்பட்டது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இதற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பிய காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிந்தைய அரசியல் சூழலிலும் பங்களாதேஷில் இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்கள் தொடர்ந்து தூண்டிவிடப்படுவது இரு நாடுகளுக்கிடையேயான உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

X