

டெக்சாஸை தளமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானம் ஒன்று, மிச்சிகனில் நடந்த பயிற்சி நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து போர் விமானத்தில் இருந்த விமானி வெளியேற முடிந்ததாக, அந்த விமானத்திற்கு சொந்தமான பிரிவு தெரிவித்தது.
"149-ஆவது ஃபைட்டர் விங்கிற்கு ஒதுக்கப்பட்ட டெக்சாஸ் ஏர் நேஷனல் கார்டின் எஃப்-16 ஃபைட்டிங் ஃபால்கன் விமானம், டிராவர்ஸ் சிட்டி அருகே வழக்கமான பயிற்சி பணியின் போது விபத்துக்குள்ளானது," என்று அந்தப் பிரிவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"விமானி விமானத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று அது மேலும் விவரங்கள் அளிக்காமல் தெரிவித்தது.
மேலும், அந்த வடக்கு மாகாணத்தின் இரண்டு அமெரிக்க செனட்டர்களில் ஒருவரான கேரி பீட்டர்ஸ், பேசும் போது, "டிராவர்ஸ் சிட்டிக்கு அருகே நடந்த விமான விபத்து குறித்து நான் அறிந்திருக்கிறேன். இந்தச் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற நாங்கள் பணியாற்றி வருவதால், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" என்றும் கூறினார்.
விமானம் கீழே விழுந்த பிறகு, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சாட்சிகள் அடர்த்தியான கருப்புப் புகை, சிதறல்கள் மற்றும் வெடிப்புகளைக் கண்டதாக விவரித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நாதன் ஸ்மித், அந்த போர் விமானம் வழக்கத்திற்கு மாறாக தாழ்வாகவும் மெதுவாகவும் பறப்பது போல் தோன்றியதால், அதை பதிவு செய்ய தொடங்கியதாக ஏ.பி. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பின்னர் ஒரு பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டதாகவும், அது விமானி வெளியேறிய சத்தம் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
வெண்டி சோபெக், தானும் தன் கணவரும் ஒரு பெரிய மோதல் சத்தத்தைக் கேட்டதாகவும், பின்னர் பெரிய அளவிலான கருப்புப் புகையைக் கண்டதாகவும் கூறினார். அவரது கணவர், ஃப்ரெட் சோபெக், விபத்தில் சிக்காத ஒரு வீடு மற்றும் கேம்பர் வாகனத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் ஒரு பெரிய நெருப்புப் பந்தைக் கண்டதாகக் கூறினார்.