

ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அரசுக்கு எதிராக போரிட்டு வருகிறது. அரசுக்கு சவுதி அரேபியா உதவி வருகிறது. இதனால் சவுதி அரேபியா மற்றும் ஏமனில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் மீது ஹவுதி தாக்குதல் நடத்தி வருகிறது.
சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்கா நோக்கி ஏற்கனவே ஹவுதி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சவுதி குற்றம்சாட்டியிருந்தது.
இந்த நிலையில் நேற்று மெக்கா மற்றும் மதீனா நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதனை இடைமறித்து அழித்ததாகவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் "ஹவுதி பயங்கரவாத குழுவினர் மெக்கா அல்-முகர்ரமா மற்றும் மதீனா அல்-முனவ்வரா பகுதிகளை நோக்கி ஏவிய இரண்டு ஏவுகணைகளின் துண்டுகள் அப்பகுதிகளில் விழுந்தன" எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன் வெடிகுண்டு சிதறல்கள் மெக்காவிற்கு வெளியே உள்ள வாடி முகாமாஸ், ஜெட்டாவின் அல்-நுஸ்ஹா பகுதி, தாய்ஃபின் வாடி ஜலீல் மற்றும் ராபிக்கில் உள்ள மக்கள் வசிக்காத இடம் ஆகியவற்றில் விழுந்தன என்றும் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் ஹவுதி குழு "எங்களது படைகள் மெக்கா மற்றும் மதீனா ஆகிய புனித இடங்களை நோக்கி தாக்குதல் நடத்துவதாக சவுதி பிரசாரம் செய்வது ஒரு மிகப்பெரிய பொய்யாகும்" என்று மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் புனித நகரங்களை நாங்கள் இலக்கு வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.