

தெற்கு ஏமனில் உள்ள முக்கிய துறைமுக நகரமான ஏடன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ஏமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏமனில் கடந்த 2015 முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால் ஏடனை தற்காலிக தலைநகராக கொண்டு சவுதி அரேபியா மற்றும் மேற்குலக ஆதரவு பெற்ற ஏமன் அரசு இயங்கி வருகிறது.
மறுபுறம் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தடையாக இருக்கும் சவுதி அரேபியா மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மாதம் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீதான ஹவுதி தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் முதல் ஹவுதிக்களுக்கும் ஏமன் அரச படைகளுக்கும் இடையே மொதல் அதிகரித்துள்ளது. ஹவுதி ஆளும் பகுதிகளில் சவுதி அரேபியாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஏமன் அரசு இயங்கும் ஏடனில் உள்ள கடற்படைத் தளம் மற்றும் அல் நஸ்ர் ராணுவ முகாமை ஹவுதிக்கள் குறிவைத்து தாக்கியுள்ளனர்.
ஏடன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமனின் தகவல் அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
ஏடன் மீதான ஏவுகணைத் தாக்குதல் மற்றும் ஹவுதிக்ககளிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலை தொடர்ந்து, சர்வதேச சமூகம் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.
அமெரிக்கா சவுதி அரேபியா,கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், லெபனான், இஸ்ரேல் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பயண வழிமுறைகளிலும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்தியாவும் சவுதியில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. ரியாத் விமான நிலைய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒரு இந்தியரும் அடங்குவார்.