

சவுதி அரேபியாவுக்கும், ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இதில் சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணை நிலையம் மற்றும் தலைநகர் ரியாத்தில் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன
இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி வான்வழித் தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள கிங் பகத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் விமான நிலையம் கடும் சேதம் அடைந்தது. இதையடுத்து விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதற்கு முன்பும் இந்த விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தென்கிழக்கு சவுதி அரேபியாவில், அரசுக்கு சொந்தமான அரம்கோ நிறுவனத்தால் இயக்கப்படும் எண்ணை நிலையம் மீது டிரோன்கள் ஏவப்பட்டன. அவைகளை வான்பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்தன.
இதில் டிரோன் ஒன்றின் சிதைவுகள் விழுந்ததில் பிலிப்பைன்ஸ், நேபாளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் என 2 பேர் உயிரிழந்தனர். இந்தியர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். இந்த டிரோன்கள் ஐக்கிய அரபு எமிரேட்சின் எல்லைக்கு அருகில் உள்ள ஷாய்பா எண்ணை வயலை குறி வைத்து ஏவப்பட்டதாக சவுதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமான நிலையம் மற்றும் எண்ணை நிறுவனம் மீதான தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு உடனடியாக வெளியாகவில்லை.
தொடர் தாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியாவில் அத்தியாவசியமற்ற தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் கூறும்போது, “இந்த உத்தரவு சவுதி அரேபியாவில் அவசரத் தேவையின்றி பணியாற்றும் அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே பொருந்தும். ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பும் நலனுமே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. அவர்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.