உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மழை.. மால்கள், பள்ளிகள், மெட்ரோ நிலையம் சேதம் - 2 பேர் பலி

ரஷியா தொடர்ந்து உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்புகளை தாக்கி வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மழை.. மால்கள், பள்ளிகள், மெட்ரோ நிலையம் சேதம் - 2 பேர் பலி
Published on: 
Summary

உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல் அதிகரித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் இடையே கடந்த 2022 முதல் போர் நடந்து வருகிறது. அமெரிக்கா அமைதி முயற்சிகளை மேற்கொண்டபோதும் அனைத்தும் தோல்வி கண்டது.

டிரம்ப் டபுள் கேம்

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக நலன்களுக்காக உக்ரைனை விடுத்து ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

ரஷிய டீசல் ஏற்றுமதி மீதான தடை உள்ளிட்ட வர்த்தக தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இது அமெரிக்காவில் உள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் உக்ரைன் அதிபரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார் டிரம்ப்.

அதுமட்டுமன்றி இரு நாடுகள் இடையே எரிசக்தி ஒப்பந்தம் வந்துவிட்டது என்று டிரம்ப் அறிவித்தார். இதன்மூலம் எரிசக்தி உள்கட்டமைப்புகளை தாக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் ரஷியா தொடர்ந்து உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்புகளை தாக்கி வருகிறது.

தரைமட்டம்

இந்நிலையில் நேற்று அதிகாலையில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மீது ரஷியா நாட்டு ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் சோலோமியான்ஸ்கி நகரில் உள்ள 25 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்தது.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே, மொத்தம் 269 டிரோன்களை ரஷியா வீசிய நிலையில், 243 டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் தாக்குதல்

இதனிடையே நேற்று இரவு கீவ் நகரை நோக்கி ரஷிய ஏவுகணைகள் தொடர்ச்சியாகப் பாய்ந்தது. இதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

இரவு 11 மணி சுமாருக்கு தலைநகரில் பல வெடிப்புகள் நிகழ்ந்தன.அதிகாலை 3 மணி மற்றும் 7 மணியளவில் மேலும் தாக்குதல்கள் நடந்தன.

குறைந்தது மூன்று மாவட்டங்களில் சேதம் பதிவாகியுள்ளதாக உக்ரைனின் மாநில அவசரகால சேவை தெரிவித்துள்ளது.

டெஸ்னியான்ஸ்கி மாவட்டத்தில் குடியிருப்பு அல்லாத கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாலும், மெட்ரோ நிலையம் சேதமடைந்ததாலும் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

வணிக வளாகங்கள், பள்ளிகளும் சேதம் அடைந்துள்ளன.

உயிரிழந்தவர் 21 வயது பெண் என கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ முன்னதாக தெரிவித்திருந்தார் .

X

Maalai Malar
www.maalaimalar.com