

இந்தியாவுக்கு விதிக்கவிருந்த 100 சதவீத அபராத வரியை ரத்து செய்து அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் ரூ.11.30 லட்சம் கோடி வர்த்தகம் முடக்கம் ஏற்படாமல் தப்பியது.
டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இருந்தே, அமெரிக்காவிற்கு சாதகமான அமெரிக்கா முதலில் என்ற வரிக்கொள்கையை தீவிரமாகப் பின்பற்றி வருகிறார். குறிப்பாக, இந்தியாவை ஒரு வரி விதிப்பு அரசன் என்று டிரம்ப் பலமுறை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறி, இந்தியாவிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு வர்த்தக அந் தஸ்தை டிரம்ப் அரசு ரத்து செய்தது.
இதற்கு பதிலடியாக இந்தியாவும் அமெரிக்காவின் 28 பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தது. கடந்த 2025-ம் ஆண்டு டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகும், இந்தியப் பொருட்கள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மறைமுக வர்த்தகப் போரை நீட்டிக் கச் செய்தார்.
உக்ரைன் போருக்குப் பிறகும் ரஷியாவிடமிருந்து இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் மலிவு விலையில் கச்சா எண்ணெயைத் தொடர்ந்து வாங்கியது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஷியாவின் வருவாயை முற்றிலும் முடக்க ஒரு கடுமையான சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. அதன்படி ரஷியா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பும் அனைத்துப் பொருட்கள் மீதும் 500 சதவீத அபராத வரி விதிக்கப்படும் என முன்மொழியப்பட்டது.
இது உலக வர்த்தகத்தையே முடக்கும் அளவுக்குக் கடுமையானதாக இருந்தது. இந்த வரி விதிப்பு அமெரிக்காவின் சொந்தப் பொருளாதாரத்தையும், அதன் நட்பு நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். இதனால், நாடாளுமன்ற விவாதங்களுக்குப் பிறகு இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. அதன்படி, கடந்த 18-ந்தேதி டிரம்ப் இதில் கையெழுத்திட்டபோது, ரஷிய எண்ணெயை வாங்கும் இந்தியா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கப்பட்டது.
இந்த சட்டமானது இன்று முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. அமெரிக்காவின் இந்த கடுமையான வரிவிதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் ரூ.11.39 லட்சம் கோடி (120 பில்லியன் டாலர்) மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகம் முற்றிலும் முடங்கி, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டது. இந்தநிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கவிருந்த கடுமையான வர்த்தகக் கட்டண அச்சுறுத்தலில் இருந்து டிரம்ப் விலக்கு அளித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கான காலக்கெடு முடிவடைய சில மணி நேரங்களே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. அமெரிக்காவில் டீசல் விலையைக் கட்டுப்படுத்தவும், வரவிருக்கும் இடைத்தேர்தலைச் சந்திக்கவும் டிரம்ப் இந்த அவசர வர்த்தக விலக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த அதிரடி உத்தரவு மூலம் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியா தப்பியுள்ளது.