

ரஷியா- உக்ரைன் இடையே நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின்போது, ரஷியா- உக்ரைன் போர் தொடர்பான சமீபத்திய நிலவரங்கள் குறித்து ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளே சிறந்த வழி என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும், இந்த மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.