தயவுசெஞ்சு உதவுங்க.. ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரள பெண் Vlogger-ஐ கைது செய்த தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை
அருணிமா
அருணிமா
Published on
Summary

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் இந்திய பெண் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த Travel Vlogger ஆன அருணிமா, 'பேக்பேக்கர் அருணிமா' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உலகின் பல இடங்களுக்கு பயணப்பட்டு அங்குள்ள அனுபவங்களை விவரித்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் கைது

அந்த வகையில் தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் சென்றுள்ள அவர் அங்கு பாமியான் பகுதியில் தாலிபான் அதிகாரிகளால் சிறைபிடிபட்டுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் அருணிமா, முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதிப் கடிதம் கையில் இல்லாமல் தனியாக பயணித்ததால் தாலிபான்கள் தன்னை கைது செய்துள்ளதாகவும் இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள உதவி செய்யுமாறும் கோரியிருந்தார்.

அவர் அந்த பதவியை வெளியிட்ட சுமார் 3 மணி நேரத்திற்குள், தாலிபான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தான் விடுவிக்கப்பட்டதாக அவர் மீண்டும் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.

விடுதலை

பாமியான் வருவதற்கு முன்பாகத் தனக்கு உதவிய ஒரு நபரைத் தொடர்புகொண்டு, அவர் மூலமாக தாலிபான் அதிகாரிகளுடன் அருணிமா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இனி ஆப்கானிஸ்தானில் பயணம் செய்யும்போது முறையான அனுமதி பெற வேண்டும் என்றும், வழிகாட்டி ஒருவருடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து அவரை தாலிபான் அதிகாரிகள் விடுத்துள்ளனர். மேலும் அவருக்கு அபராதமும் விதித்துள்ளனர்.

பெண்கள் தனியாக பயணிக்க தடை

கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்கிய அருணிமா, ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை என்றும், விதியை மீறியதால் கைது செய்வதாக அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

அங்குள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் செல்ல தனித்தனியாக அனுமதி பெற வேண்டும். இவர் தனியாகப் பயணிக்கும் பெண் என்பதால் பாமியானிலும், அதற்கு முன்னதாக ஜலாலாபாத்திலும் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் பயணத்தின் போது தாலிபான்கள் பலமுறை தன்னை வழிமறித்துச் சோதனையிட்டதாகவும், கேள்வி எழுப்பியதாகவும் அருணிமா குறிப்பிட்டுள்ளார்.

ஆண் பயணிகளுக்கு இல்லாத பல கடுமையான கட்டுப்பாடுகள் தான் ஒரு பெண் என்பதால் தன் மீது திணிக்கப்பட்டதாகவும், பயணத்தின் பெரும் பகுதி பாதுகாப்பிற்காக 'பர்தா' அணிந்தே பயணித்ததாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com