

பாரசீக வளைகுடா வான்பரப்பில் பறந்த அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை ஏவுகணை வீசி சேதப்படுத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இது முற்றிலும் பொய்யான தகவல் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பாரசீக வளைகுடா வான்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் எப்-16 போர் விமானத்தைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணை வீசித் தாக்கியதாக ஈரான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஈரான் ஏவிய ஏவுகணை அந்தப் போர் விமானத்திற்கு மிக அருகே சென்று வெடித்ததாகவும், இதனால் விமானி சுதாரித்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள விமானத் தளத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கியதாகவும் ஈரான் கூறியிருந்தது.
இந்நிலையில், ஈரானின் இந்தக் கருத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரான் தரப்பில் கூறப்படுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், ஈரான் எந்தவொரு அமெரிக்க எப்-16 போர் விமானத்தையும் தாக்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து அமெரிக்கப் போர் விமானங்களும் எவ்விதப் பாதிப்புமின்றி பாதுகாப்பாக உள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.