

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தான் இளைஞர் ஒருவருக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமெரிக்கா கடந்த 2020 ஆம் ஆண்டு ஆளில்லா விமானம் மூலம், ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை படுகொலை செய்தது.
இதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 48 வயதான ஆசிஃப் மெர்ச்சன்ட் கடந்த 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு பயணமாக வந்துள்ளார்.
இவர் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையுடன் இணைந்து டிரம்பை கொலை செய்வதற்காக சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.
இதையடுத்து அமெரிக்காவிற்கு பயணம் செய்து, டிரம்பை கொலை செய்வதற்காக கூலிப்படையை ஏற்படுத்த ஆசிஃப் திட்டமிட்டுள்ளார்.
இவரது முதன்மையான தாக்குதல் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி ஆகியோர்களின் பெயர்கள் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானை சேர்ந்த ஆசிஃப், அமெரிக்காவில் உள்ள கூலிப்படையை அணுகி டிரம்பை கொலை செய்வதற்காக ரூபாய் 5 லட்சம் தருவதாக கூறியுள்ளார்.
அப்போது கூலிப்படையினர், எஃப்.பி.ஐ அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து கூலிப்படைகள் போன்று வேடமிட்ட எஃப்.பி.ஐ அதிகாரிகள், ஆசிஃபை சந்தித்துள்ளனர்.
அப்போது கூலிப்படைகள் போன்று வேடமிட்டிருந்த அதிகாரிகளிடம், சுமார் ஐந்து லட்சம் ரூபாயை ஆசிஃப் கொடுத்த போது அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிஃப், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டிய ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அவரை குற்றவாளி என மார்ச் 2026 அன்று அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று கூட்டாட்சி நடுவர் நீதிமன்ற நீதிபதி எரிக் ஆர் கோமிட்டீ முன்பு மீண்டும் வந்தது.
அப்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆசிஃப்புக்கு 27.5 ஆண்டுகள் (330 மாதம்) சிறைத்தண்டனை விதித்து நீதிபதி எரிக் தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் டிரம்பை கொலை செய்யும் சதித்திட்டத்திற்கு பின்னால் ஈரான் உள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.