பாகிஸ்தான் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ராபியா அசன் சுட்டுக் கொலை: கணவர் கைது

ராவல்பிண்டியின் குல்ஷனாபாத் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று பிற்பகலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
 Rabia Asan
Published on: 

பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான ராபியா அசன் தனது வீட்டில் மர்மமான முறையில் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராவல்பிண்டியின் குல்ஷனாபாத் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று பிற்பகலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராபியா அசனின் படுக்கையறையில் இருந்து திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்த குடும்பத்தினருக்கு, ராபியா அசன் ரத்த வெள்ளத்தில் படுக்கையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கணவர் கைது

சம்பவம் நடக்கும்போது ராபியாவின் தாயாரும் சகோதரியும் வீட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, துப்பாக்கி தற்செயலாக வெடித்ததாகவும், தான் வைத்திருந்த துப்பாக்கியில் குண்டு இருப்பது தனக்கு தெரியாது என்றும் ராபியாவின் கணவர் காவல்துறையிடம் ஆரம்பத்தில் தெரிவித்துள்ளார். எனினும், வீட்டில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக வைத்திருந்த .30 போர் ரகத் துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். உயிரிழந்த ராபியாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தடயவியல் விசாரணை

தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகர காவல் துறை அதிகாரி மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். ராபியாவின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, நாட்டில் பெண்களுக்கும் பணிபுரியும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது கவலை அளிப்பதாகக் கூறி பாகிஸ்தான் நாட்டின் முதன்மைத் தலைவர் ஆசீஃபா பூட்டோ-சார்தாரி இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

X