

அமெரிக்க உளவுத்துறையின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், பீஜிங்கை களங்கப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்ட அவதூறு பிரசாரம் என்றும் சீனா கடுமையாகச் சாடியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான 'என்விடியா' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங் விவகாரத்தில், தன் மீது சுமத்தப்பட்ட உளவு பார்த்தல் மற்றும் சதித் திட்டக் குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலும் மறுத்துள்ளது. அமெரிக்க உளவுத்துறையின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், பீஜிங்கை களங்கப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்ட அவதூறு பிரசாரம் என்றும் சீனா கடுமையாகச் சாடியுள்ளது.
என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங்குடன், பெய்ஜிங்கிற்காகத் தகவல்களைத் சேகரித்ததாகக் கூறப்படும் ஒரு பெண் வணிக நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் கடுமையான தொழில்நுட்பத் தடைகளையும் மீறி, சீனாவிற்கு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கணினிச் சில்லுகளை (Chips) விற்பனை செய்வதில் ஜென்சன் ஹுவாங் செல்வாக்கு செலுத்தினாரா என்ற கோணத்தில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தாமாக முன்வந்து முறையான விசாரணையையும் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் உலகளாவிய நிதிச் சந்தைகளிலும் தொழில்நுட்பத் துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "சீனா மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்தவொரு உண்மையும் இல்லை. இது பீஜிங்கிற்கு எதிரான ஆதாரமற்ற அவதூறு பிரசாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்ப ஆதிக்கப் போட்டியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் அதிநவீன சில்லுகள் வர்த்தக விவகாரம், தற்போது இந்த உளவுச் சர்ச்சையால் புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக என்விடியா தரப்பும், சம்பந்தப்பட்ட தரப்பினரும் விரிவான விசாரணைகளை எதிர்கொண்டு வரும் சூழலில், சீனாவின் இந்த நேரடியான மறுப்பு உலக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.