

சவுதி அரேபியாவிற்கு மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், தங்களது ராணுவ படைகளை விரைவாக அனுப்ப உள்ளதாக பாகிஸ்தானும், துருக்கியும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகள் கடந்த ஆகஸ்ட் 7 அன்று மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், மூன்று உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்ற உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் உள்ள பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில், போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏமனுக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் ஹவுதிகள் மீது தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதையடுத்து சவுதியின் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினா மீது ஹவுதிகள் தாக்குதலை நடத்தினர்.
ஹவுதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன.
இந்தநிலையில் ஹவுதிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து மூன்று நாடுகளை சேர்ந்த ராணுவ தளபதிகளும் கடந்த மாதம் 25-ந்தேதி ரியாத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து ரியாத்தில் அக்டோபர் 5-ந்தேதி அன்று மெக்கா பாதுகாப்பு கூட்டணியின் வியூக அரசியல் மற்றும் பாதுகாப்பு குழுவின் அவரச கூட்டம் நடைபெற்றது.
இந்த உயர்மட்ட கூட்டத்தில் மூன்று நாடுகளின் மூத்த பாதுகாப்பு மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான், பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலர் மற்றும் பொதுப் படைத் தலைவர் ஜெனரல் செல்சுக் பைரக்டரோக்லு ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாகிஸ்தான் சார்பில் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தார், பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியும் ராணுவத் தலைமை தளபதியுமான ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது ஆசிஃப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சவூதி அரேபியா சார்பில் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத், பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் மற்றும் பொதுப் படைத் தலைமை தளபதி ஜெனரல் ஃபயாத் பின் ஹமீத் அல்-ருவைலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் நெளமான் மஹூத்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதையடுத்து இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தற்போது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தங்கள் நாடுகளின் புதிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், சவுதி அரேபியாவிற்கு ராணுவ படைகள் மூலம் உதவிகளை வழங்க பாகிஸ்தானும், துருக்கியும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், கூட்டு பாதுகாப்பு உறுதிமொழிகளை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், சவுதி அரேபியாவிற்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்ட ராணுவ படைகளை விரைவாக வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகள் சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தேசிய சட்டங்களுக்கு இணங்க ராணுவ படைகள் நிலைநிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ராணுவ தயார் நிலையை வலுப்படுத்தவும், மூன்று நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, ஹவுதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.