இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி!

கைதிகளின் அடிப்படை உரிமைகள், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வது முக்கியம் என பாகிஸ்தான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி!
Published on

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானை, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு 2 நாட்களுக்குள் மாற்றுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இம்ரான் கானின் சகோதரி டாக்டர் உஸ்மா கான், அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் ஃபைசல் சுல்தான் உட்பட அவருக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட ஒரு மருத்துவக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்பத்தினர் மருத்துவமனையில் இம்ரான் கானை சந்திக்கலாம் என்றும், வெளிநாட்டில் வசிக்கும் மகன்களுடன் இம்ரான் கான் பேசவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

என்ன சிகிச்சை?

பல ஊழல் வழக்குகள் தொடர்பாக கடந்த 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார். நீண்டநாட் சிறையில் இருப்பதால் அவருக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகவும், மேலும் சிறையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த உடல்நலப் பிரச்னைகள் தொடர்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு மருத்துவர்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், தனியார் மருத்துவ நிபுணர்களின் சிகிச்சை தேவை என்றும் அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

ஆனால் மருத்துவமனையை மாற்றமுடியாது, அதற்கு பதில் ஒரு மருத்துவ குழுவை அமைத்து, அந்தக் குழு அளிக்கும் அறிக்கையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடந்த சில மாதங்களாக இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், கடந்த வாரம் அவரை பரிசோதித்த மருத்துவக்குழு நேற்று மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தது.

இம்ரான் கானின் மருத்துவ அறிக்கை

73 வயதான இம்ரான் கான், தனது குடும்பத்தினரை நீண்டநாட்களாக காணததால் அவருக்குக் கடுமையான ரத்த அழுத்தம், மன உளைச்சல் மற்றும் இதயத் துடிப்பில் மாறுபாடுகள் ஏற்பட்டதாக சுட்டிக் காட்டியது.

மேலும் நாடித்துடிப்பும், இதய நிலையும் இயல்பாக இல்லை என்றும், அவரது முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படத் தொடங்கியிருந்தன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வலது கண் பார்வையில் கடுமையான பாதிப்பு

மேலும் இம்ரான் கானுக்கு வலது கண்ணில் CRVO (Central Retinal Vein Occlusion) என்ற ரத்த நாள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது வலது கண் பார்வையில் சுமார் 85 சதவீதத்தை இழந்துவிட்டார் என்று அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

சிறையில் இதற்கு உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இந்த மருத்துவ அறிக்கையைத் தொடர்ந்து மருத்துவமனை மாற்றத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com