

ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சிகள் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.
ஸ்வீடன் நாடாளுமன்றமான ரிக்ஸ்டாக்கில் மொத்தம் 349 இடங்கள் உள்ளன. இறுதி தேர்தல் முடிவுகளின்படி, எதிர்க்கட்சிகள் 176 இடங்களையும், ஆளும் கூட்டணியை ஆதரிக்கும் கட்சிகள் 173 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
நடந்து முடிந்த தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு 3 இடங்கள் மட்டுமே பெரும்பான்மை கிடைத்துள்ளது.
தேர்தல் வெற்றியின் மூலம் முன்னாள் பிரதமரும், சமூக ஜனநாயக கட்சியின் தலைவருமான மக்டலேனா ஆண்டர்சன் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவரது சமூக ஜனநாயக கட்சி 99 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், அந்த கட்சி கடந்த தேர்தலைவிட 8 இடங்களை தற்போது இழந்துள்ளது.
இதற்கிடையே, ஆண்டர்சன் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஆட்சி அமைப்பதில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்டர் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிக்கு இடையே உள்ள அரசியல் வேறுபாடுகள் புதிய அரசை அமைப்பதில் சவாலாகது உள்ளது.
கிறிஸ்டர்சன் தலைமையிலான கூட்டணி கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வந்தது. அந்த அரசுக்கு ஸ்வீடன் ஜனநாயகக் கட்சி வெளிப்புற ஆதரவு அளித்து வந்தது.
இந்த தேர்தலில் ஸ்வீடன் ஜனநாயகக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சி 62 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தைவிட 11 இடங்களை இழந்து 3-வது பெரிய கட்சியாக மாறியுள்ளது.
நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் 2024-ம் ஆண்டு இணைந்தது. உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பது, நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து உள்ளிட்ட சில முக்கிய விவகாரங்களில் அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளிடையே தொடர்ந்து ஒருமித்த கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.