நேபாள வெள்ளப் பேரழிவு: காணாமல் போனவர்களை அடையாளம் காணும் இணைய தன்னார்வலர்கள்!

அமெரிக்கா, ஐரோப்பா, நியூசிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பலரும் இக்குழுவில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
Sonia Patil
Published on
Summary

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சோனியா பாட்டீல் என்ற பெண், தனது ஓய்வு நேரத்தில் பலியானவர்களின் புகைப்படங்களை ஆராய்ந்து குடும்பத்தினருக்கு உதவி செய்து வருகிறார்.

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து, பெரும் வெள்ளமும் சேறும் சகதியும் கிராமப் பகுதிகளைத் தாக்கியது. இந்த பேரழிவில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் 5,500-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

இந்த சூழலில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது அவர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கும் பணியாக மாறியுள்ளது. நேபாள காவல் துறை சார்பில் பலியானவர்களின் உடல்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றைத் நேரடியாகப் பார்த்து அடையாளம் காண முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இணையம் வழியே ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சமையல்காரராகப் பணியாற்றும் சோனியா பாட்டீல், தினசரி 12 மணி நேர வேலைக்கு பிறகும் இரவு நேரங்களில் இந்த சேவைப் பணியில் ஈடுபட்டு வருகிறார். காவல் துறை இணையதளத்தில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை கவனமாக ஆராய்ந்து, அதில் காணப்படும் பச்சை குத்தப்பட்ட அடையாளங்கள், ஆடைகள் மற்றும் நகைகள் போன்ற தனித்துவமான குறிப்புகளைப் பட்டியலிடுகிறார்.

இவ்வாறு தொகுக்கப்படும் தகவல்கள் முகநூல் குழுக்களில் பகிரப்பட்டு, காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. இதில் ஏதேனும் சாத்தியமான அடையாளங்கள் கண்டறியப்பட்டால், நேபாளத்தில் உள்ள ஆய்வகங்களில் மரபணு பரிசோதனை செய்து உறுதிப்படுத்துமாறு அக்குடும்பத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அமெரிக்கா, ஐரோப்பா, நியூசிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பலரும் இக்குழுவில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அழுகிய நிலையில் உள்ள உடல்களைத் தொடர்ந்து பார்த்து அடையாளம் காண்பது கடினமான பணியாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தைக் குறைக்கும் நோக்கில் இச்சேவையைத் தொடர்ந்து செய்து வருவதாக சோனியா தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com