ஈரானுக்கு உதவினால்.. பிரதமர் மோடி - பெசெஷ்கியான் சந்திப்பு பற்றி மார்கோ ரூபியோ பகிரங்கம்

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் இரண்டாம் கட்டப் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும்
பிரதமர் மோடி,பெசெஷ்கியான், மார்கோ ரூபியோ
பிரதமர் மோடி,பெசெஷ்கியான், மார்கோ ரூபியோ
Published on

பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்துப் பேசியதன் பின்னணியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

எச்சரிக்கை

ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இருப்பினும், ஈரானுக்கு தடைகளை தவிர்க்க எந்தவொரு நாடும் உதவக்கூடாது என்பதில் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் மிகவும் தெளிவாக உள்ளது.

ஈரானின் பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுதத் திட்டங்களுக்கு வருவாய் ஈட்டித் தரும் வழிகளை உருவாக்கும் நாடுகள் மீதும் நாங்கள் தடைகளை விதிக்க வேண்டியிருக்கும்" என தெரிவித்துள்ளார்.

ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்

கடந்த ஆகஸ்ட் 24 அன்று அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரானின் பொருளாதாரப் பாதைகளை அடைப்பதற்காக "ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்" என்ற திட்டத்தை அறிவித்தார்.

இதன்மூலம் ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் இரண்டாம் கட்டப் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மோடி - பெசெஷ்கியான் சந்திப்பு

கடந்த ஆகஸ்ட் 31 அன்று கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் இடையே பிரதமர் மோடி, ஈரான் அதிபர் பெசெஷ்கியானை சந்தித்துப் பேசினார்.

சந்திப்பில், இந்தியா - ஈரான் இடையேயான பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்துதல் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள், சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் மாலுமிகள் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

மோடி பதிவு

இது குறித்து பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "ஈரானுடனான நீண்டகால நட்புறவை பல்வேறு துறைகளில் வலுப்படுத்த மீண்டும் உறுதிபூண்டுள்ளோம்.

வரும் காலத்தில் நமது வர்த்தகக் கூடையை விரிவுபடுத்த விரும்புகிறோம். பிராந்தியத்தில் நிலையான அமைதியை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்" எனக் குறிப்பிட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com