கொரோனா பெருந்தொற்று பதிவுகளை மறைக்க சதி செய்த நபர்.. அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்

ஆராய்ச்சி நிதி மானியங்களுக்காக கொரோனா பதிவுகளை மறைத்ததை நீதிமன்றத்தில் டேவிட் ஒப்புக்கொண்டார்.
Covid Records Conspiracy
Published on

அமெரிக்காவை சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் அந்தோனி ஃபாசியின் முன்னாள் ஆலோசகர் ஒருவர், ஆராய்ச்சி நிதி மானியங்களை பெறுவதற்காக கொரோனா பெருந்தொற்று தொடர்பான அரசாங்க ஆவணங்களை மறைத்து சதித்திட்டம் தீட்டிய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

கொரோனா ஆராய்ச்சி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தில் (Niaid) ஃபாசி என்பவரின் கீழ் மூத்த அதிகாரியாக டேவிட் மோரன்ஸ் என்பவர் பணியாற்றினார்.

78 வயதான டேவிட், கொரோனா ஆராய்ச்சி மானியங்கள் தொடர்பாக ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்த பொது ஆவண கோரிக்கைகளை முறியடிக்கும் ஒரு திட்டத்தை தீட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டேவிட் என்பவருக்கு ஆதரவாக வழக்கறிஞர் திமோதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர், இன்று தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம், டேவிட் தான் செய்த செயலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறினார்.

இதையடுத்து பெருந்தொற்று நடவடிக்கைகளின் முகமாக திகழ்ந்த ஃபாசி, செனட் குழுவின் முன் ஆஜரானார்.

அப்போது ஃபாசி, தன்னை சிறையில் அடைப்பதற்காக கென்டக்கியைச் சேர்ந்த தனது நீண்டகால எதிரியான குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் ராண்ட் பால் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.

FBI குற்றச்சாட்டு

கொரோனா நோயின் தோற்றம் குறித்த மர்மம் இன்னும் நீங்காத நிலையில், சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவே இந்த பெருந்தொற்றுக்கு காரணமாக இருக்கலாம் என்று 2023-ஆம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த உள்நாட்டு உளவு மற்றும் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) கூறியது.

அமெரிக்காவின் இந்த கூற்றில் எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லை என்று கூறி சீனா தொடர்ந்து மறுத்து வந்தது.

ஜனவரி 2025-ல், சீன ஆய்வகத்தில் கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த வெளிநாட்டு உளவு அமைப்பான சி.ஐ.ஏ (CIA) கூறியது.

அதே நேரத்தில், மற்ற நான்கு அமெரிக்க உளவு நிறுவனங்களும் தேசிய புலனாய்வு மன்றமும், இந்த வைரஸ் பெரும்பாலும் ஏதேனும் ஒரு விலங்கின் மூலம் இயற்கையாக பரவியிருக்கலாம் என்று கூறியது.

சீனாவில் உள்ள வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா தோன்றியது என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வெளவால் இனத்தின் மீது கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி மானியத்தை ரத்து செய்ய தேசிய சுகாதார நிறுவனங்கள் முடிவு எடுத்தது.

இந்த முடிவு குறித்து டேவிட் மனு தாக்கல் செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் செனட் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், வௌவால் இனத்தின் மீது கொரோனா வைரஸ் மானியத்தை மீட்டெடுக்க தான் உதவுவதாகவும், ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா பரவல் ஏற்பட்டது என்ற வதந்தியை, நான் முறியடிப்பதாகவும் டேவிட் உறுதியளித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறியும் உரிமை சட்ட கோரிக்கைகள் மூலம் தங்களது தகவல்தொடர்புகள் அரசாங்கத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் என்பதை அறிந்து, டேவிட் அவரது அரசு மின்னஞ்சல் கணக்கிற்கு பதிலாக தனது தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்தி தொடர்புகொண்டனர் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டேவிட் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நவம்பர் 12 அன்று அவருக்கு தண்டனை விதிக்கப்படும் போது, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com