

மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில், இந்தியாவின் சில கல்வி நிறுவனங்கள் விடுதி அறைகளில் உள்ள சீலிங் பேன்களை மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஐ.ஐ.டி. பாம்பே மாணவர் ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, விடுதி அறைகளில் உள்ள சீலிங் பேன்களுக்கு பதிலாக சுவரில் பொருத்தப்படும் பேன்களை நிறுவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் 2023-ம் ஆண்டு 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து கட்டிடத்தின் மேல் தள பால்கனிகள், படிக்கட்டுகள் மற்றும் நடைபாதைகளில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 2009-10-ம் கல்வியாண்டில் அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து பள்ளத்தாக்குகளுக்கு மேலே அமைந்திருந்த 8 பாலங்களில் நிரந்தர தடுப்புகள் மற்றும் சில பகுதிகளில் வேலிகள் அமைக்கப்பட்டன.
நியூயார்க் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களை தொடர்ந்து பால்கனிகளில் வெளிப்படையான பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், சில விடுதி ஜன்னல்களில் மாணவர்கள் அதிகமாக திறக்க முடியாத வகையில் பூட்டுகள் பொருத்தப்பட்டன.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் புரூனல் பல்கலைக்கழகத்திலும் மாணவர் விடுதிகளின் ஜன்னல்களை குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே திறக்கக்கூடிய வகையில் கட்டுப்பாட்டு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதைப்போலவே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வாட்ஹாம் கல்லூரியில், ஜன்னல் கட்டுப்பாட்டு அமைப்புகளை மாணவர்கள் மாற்றக்கூடாது என விதிமுறைகள் உள்ளன. மேலும், கூரைகள் மற்றும் உயரமான பகுதிகளை பயன்படுத்துவதற்கும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பால்கனிகளில் பாதுகாப்பு கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர் தற்கொலைகளை தடுப்பதில் ஆபத்தான வழிகளுக்கான அணுகலை கட்டுப்படுத்துவது ஒரு முக்கியமான தடுப்பு நடவடிக்கை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், பேனர்களை அகற்றுவது மட்டுமே தற்கொலைகளை தடுக்க போதுமான நடவடிக்கை அல்ல என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
.மேலும் இது ஒரு வெறும் வெளிப்பூச்சு நடவடிக்கைகளா அல்லது தற்காலிக தீர்வுகளா என்பது குறித்த விவாத்தையும் இது தூண்டியுள்ளது
மாணவர்களின் கல்வி அழுத்தம், சமூக பிரச்சனைகள், சாதி பாகுபாடு, நிதி நெருக்கடி, பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகளையும் கல்வி நிறுவனங்கள் முக்கியம் கவனிக்க வேண்டும் என்று மனநல நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பதிலாக மாணவர்களுக்கு போதுமான ஆலோசனை, மனநல சிகிச்சை மற்றும் ஆதரவு அமைப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அவர்கள் தங்களது பிரச்சினைகளை பாதுகாப்பாக பகிரக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.