

அமெரிக்காவின் இத்தகைய தீவிர நடவடிக்கைகளுக்கு ஈரான் சார்பில் கடுமையான பதிலடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகே பயங்கர வெடி சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலே இதற்குக் காரணம் என ஈரானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
எண்ணெய் டேங்கர் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வந்த தருணத்தில், அதை இலக்கு வைத்து நான்கு ஏவுகணைகள் வீசப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தாக்குதலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வெடிப்புச் சத்தம் கேட்டபோதிலும் கார்க் தீவுப் பகுதியில் புகை எதுவும் எழும்பியதை உடனடியாகக் காண முடியவில்லை என ஈரான் குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கிடையே நிலவி வரும் மோதல் போக்கு கடந்த சில நாட்களாக மேலும் தீவிரமடைந்துள்ளது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் மையங்கள் மற்றும் சுரங்கம் தோண்டும் திறன்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைச் செய்து வரும் கார்க் தீவுப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகத்தைப் பெருமளவில் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் இத்தகைய தீவிர நடவடிக்கைகளுக்கு ஈரான் சார்பில் கடுமையான பதிலடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.