

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், "ஏதேனும் ஒரு வழியில் இந்த போர் மிக விரைவில் முடிவடையும். போர் முடிந்தவுடன் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாகக் குறையும்" என்று உறுதியளித்துள்ளார்.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இதன் காரணமாக வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.
ஈரானில் தற்போது நிலவி வரும் மிகக் கடுமையான பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சரிவு ஆகியவை அந்நாட்டைப் பெரிதும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஈரான் ராணுவத்தின் முக்கிய கட்டமைப்புகள் பலவீனமடைந்துள்ளதாகக் கூறினார். ஈரான் அணுஆயுதத்தை பெறுவதைத் தடுப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்றும், அந்த இலக்கை அடையும் வரை நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
போர் முடிவுக்கு வந்தவுடனேயே, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தேங்கியுள்ள கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும், சந்தையில் எண்ணெய் விநியோகம் அதிகரித்து விலை கட்டுக்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் எரிபொருள் தேவையைச் சமாளிக்கத் தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.