இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைக்கு ஆளான ரஷியா.. என்ன நடந்தது?

43,000 பேரல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்பட்டு ரஷியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா
ரஷியா
Published on

இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கு ரஷியா தள்ளப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா தனது சொந்த நாட்டின் பெட்ரோல் - டீசல் தேவைக்கு 90 சதவீதம் வெளிநாட்டு கச்சா எண்ணெய்யையே நம்பி உள்ளது.

வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வங்கி இங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பெட்ரோல் - டீசல் தயாரிக்கப்பட்டு உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஈரான் போரினால் ஹார்முஸ் ஜலசந்தியில் நிச்சயமற்ற சூழலால் மத்திய கிழக்கில் இருந்து வர வேண்டிய கச்சா எண்ணெய் வரத்தில் தொய்வு நிலவுகிறது.

மேலும் அமெரிக்காவின் அழுத்தத்தால் ரஷியாவிடமிருந்தும் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாக குறைத்தது.

ஈரான் போரினால் சர்வதேச தட்டுப்பாடு ஏற்படக்கூடாது எனபதற்காக, அமெரிக்கா வழங்கிய தளர்வினால் தற்போது ரஷியாவிடம் கொள்முதலை இந்தியா அதிகரித்த நிலையில் தற்போது அதில் ஒரு சுவாரஸ்ய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நமக்கு கச்சா எண்ணெய் விற்கும் ரஷியா, நம்மிடம் பெட்ரோல் வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்விதழான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்தியாவின் நயாரா எனர்ஜி லிமிடட் நிறுவனத்திடம் இருந்து 43,000 பேரல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்பட்டு ரஷியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் இதை உறுதோபடுத்தியுள்ளது.

இந்தியாவிடம் ரஷியா பெட்ரோல் இறக்குமதி செய்வது இதுவே முதல்முறை ஆகும்.

வர்த்தகம்

குஜராத்தின் முந்ரா துறைமுகத்தில் இருந்து ரஷிய கொடியுடன் கூடிய சைக்லோன் என்ற டேங்கர் கப்பலில் ஜூன் 18 அன்று நிரப்பப்பட்டு அனுப்பப்பட்ட இந்த 42,000 டன் பெட்ரோல், எகிப்தில் உள்ள Damietta துறைமுகதில் ஓமன் கொடி பொருத்திய கப்பலுக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து பின்னர் ஜுலே 6 அன்று புறப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரஷியா சென்று சேர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல ஜூலையில் குஜராத்தின் வதினார் துறைமுகத்தில் மேலும் 2 கப்பல்கள் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு எகிப்து துறைமுகங்களுக்கு சென்றடைந்து அங்கு வேறு கப்பல்களில் மாற்றப்பட்டு ரஷியா நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா, பெட்ரோல் வாங்க காரணம் என்ன?

கடந்த 2022 முதல் உக்ரைனுடன் போரிட்டு வருகிறது ரஷியா. டிரோன் போர் முறையை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ள உக்ரைன், ரஷியாவின் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் கையில் இருந்தும் அதை பெட்ரோலாக சுத்திகரிப்பு செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதால் ரஷியா முழுவதும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2024 முதல் உக்ரைன் ரஷியாவின் சுத்திகரிப்பு நிலையங்களை பல கட்டங்களாக தாக்கி வரும் நிலையில் அதன் தாக்கம் தற்போது முழுமையாக வெளித்தெரிய தொடங்கியுள்ளது. '

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை ரஷியாவின் 16 சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கி சேதப்படுத்தி உள்ளது உக்ரைன்.

இதில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் மாஸ்கோவில் அதிபர் மாளிகை அமைந்துள்ள இடத்திற்கு வெறும் 15 கிலோமீட்டர் தான் தள்ளியுள்ளது.

பெட்ரோல் தட்டுப்பாட்டால் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் வரிசைகட்டி நிற்கும் நெருக்கடியான சூழல் ரஷியாவில் உருவாகியுள்ளது.

எனவே ரஷியாவில் இருந்து பெட்ரோலை வெளிநாடுகளுக்கு இறக்குமதி செய்யும் தடையை இவ்வாண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மேலதிக பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது ரஷியா.

பெட்ரோல் நெருக்கடி குறித்து கடந்த ஜூன் மாதம் ரஷிய அதிபர் புதினே கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கொடுக்கல் - வாங்கல்

ஜூலையில் பெலாரஸ், கஜகஸ்தான், இந்தியா என 3 நாடுகளிடம் ரஷியா பெட்ரோல் இறக்குமதி செய்துள்ளது. 400,000 டன் பெட்ரோல் இறக்குமதி செய்ய ரஷியா இலக்கு வைத்துள்ளது.

இதனிடையே ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவில் உச்சத்தை எட்டியுள்ளது. ஜூலையில் சாதனை அளவாக ஒரு நாளைக்கு சுமார் 2.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 55.5 சதவீதம் என கெப்ளர் கப்பல் போக்குவரத்துக்கு கண்காணிப்பாக தரவுகளை ப்ளூம்பெர்க் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com