இந்திய நிறுவனத்துடன் ரூ. 768 கோடி ஆயுத கொள்முதல் ஊழல் - எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா

இந்திய நிறுவனத்துடன் 70 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 768 கோடி) மதிப்பிலான பீரங்கி குண்டுகள் கொள்முதல் கையெழுத்தானது.
எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர்
எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர்
Published on
Summary

ரஷியாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைனுக்கு பீரங்கி குண்டுகள் வழங்குவதற்காக இந்திய நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எஸ்டோனியா பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.

வட ஐரோப்பாவில் உள்ள பால்டிக் நாடுகளில் ஒன்று எஸ்டோனியா. ரஷியாவுக்கு அருகில் அமைந்துள்ளது இந்நாடு.

ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பல மேற்கத்திய நாடுகள் உதவி வருகின்றன.

அந்த வகையில் ரஷியா உடனான போரில் கடும் ஆயுத பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு உதவ எஸ்டோனியா முன்வந்தது.

அதன்படி உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கும் நோக்கில் எஸ்டோனிய அரசு இந்திய நிறுவனத்துடன் 70 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 768 கோடி) மதிப்பிலான பீரங்கி குண்டுகள் கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் எஸ்டோனியாவின் தேசிய தணிக்கை அலுவலகம் அந்நாட்டின் பாதுகாப்புத் துறையின் நிதி நிர்வாகத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது.

இந்த சர்ச்சைகளை தொடர்ந்து எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

சர்ச்சை

எஸ்டோனிய தேசிய தணிக்கை அலுவலக அறிக்கையின்படி,

2024ஆம் ஆண்டில் எஸ்டோனியாவின் பாதுகாப்பு முதலீட்டு மையம் இத்தாலியில் பதிவு செய்யப்பட்ட 'Datasel SRL' என்ற நிறுவனத்துடன் இந்த ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

Datasel SRL நிறுவனம் அதே ஆண்டில் 'Neco Defence Munitions' என்ற இந்திய நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது.

ஆயுதங்களைத் தயாரிப்பதிலோ அல்லது விற்பனை செய்வதிலோ இந்த நிறுவனத்திற்கு முன் அனுபவம் இல்லை.

ஆனாலும் எஸ்டோனிய பாதுகாப்பு முதலீட்டு மையம், ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி நிதியின் கீழ் அந்நிறுவனத்துக்கு 70 மில்லியன் யூரோக்கள் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி, ஆயுதங்கள் சில மாதங்களுக்குள் உக்ரைனைச் சென்றடைய வேண்டும், ஆனால் உற்பத்திச் சிக்கல்கள் காரணமாக விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டன.

2025ல் சில ஆயுதங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவை தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என எஸ்டோனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை எஸ்டோனியா ரத்து செய்தது. ஒப்பந்தத்தை நியாயமற்ற முறையில் ரத்து செய்ததாக அந்நிறுவனம் பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

58 மில்லியன் யூரோ மதிப்பிலான பொருட்களைத் தடையின்றி வழங்கிய பின்னரும் எஸ்டோனியா ஒப்பந்தத்தை ஒருதரப்பாக ரத்து செய்ததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தனது புகாரில் தெரிவித்துள்ளது.

இதனிடையே அந்நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கிய 70 மில்லியன் யூரோக்களை மீட்க எஸ்டோனியா முயன்று வருகிறது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எஸ்டோனிய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

பாதுகாப்பு நிதிகளின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததையும், ஒப்பந்தங்களின் முறையற்ற நிர்வாகத்தையும் எஸ்டோனிய தேசிய தணிக்கை அலுவலக அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது.

ராஜினாமா

இந்த சர்ச்சையை தொடர்ந்து தனிப்பட்ட முறையில் ஒப்பந்தங்களில் தனக்கு நேரடி பங்கில்லை என்றாலும், பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பொறுப்பெற்று பதவி விலகுவதாக ஹன்னோ பெவ்கூர் அறிவித்துள்ளார்.

உக்ரைனுக்கான எஸ்டோனியாவின் ஆதரவும் தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com