தேர்தல்.. பதறிய ஜெலன்ஸ்கி - பாதுகாப்பு அமைச்சரை நீக்கியது பற்றி விளக்கம் - உக்ரைனில் என்ன நடக்கிறது?

டிரம்ப்பை நான் ஏமாற்றியது போன்ற சங்கடமான சூழ்நிலை உருவானது.
ஜெலன்ஸ்கி ,  மிகைலோ பெடோரோ
ஜெலன்ஸ்கி , மிகைலோ பெடோரோ
Published on

ரஷியாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த ஜூலை மாதம் தனது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மிகைலோ பெடோரோ-ஐ பதவி நீக்கம் செய்தார்.

இந்த பதவிநீக்கம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் குறித்து ஜெலன்ஸ்கி முதல்முறையாக பொது வெளியில் பேசியுள்ளார்.

பதவி நீக்கம்

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சராக இருந்த 35 வயது மிகைலோ பெடோரோ பதவியேற்ற ஆறே மாதங்களில் அவர் அப்பதவியில் இருந்து கடந்த ஜூலை 16 இல் நீக்கப்பட்டார்.

உக்ரைன் ராணுவத்தில் நவீன டிரோன் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து ரஷிய எல்லைக்குள் புகுந்து பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியதால் மிகைலோ பெடோரோ, 'டிரோன் போரின் தந்தை' என்று உக்ரைன் மக்களால் கொண்டாடப்பட்டவர்.

ஏன் பதவி நீக்கம்?

உக்ரைன் ராணுவ தலைமை தளபதி அலக்சாண்டர் சிர்ஸ்கிக்கும், பாதுகாப்பு அமைச்சராக இருந்த பெடோரோவிற்கும் இடையே போர் வியூகம் தொடர்பாக ஏற்பட்ட மோதலே அவரை ஜெலன்ஸ்கி நீக்க காரணம் எனக் கூறப்பட்டது.

எதிர்காலப் போர் டிரோன்கள் மூலமே நடக்கும் என்று பெடோரோவ் வாதிட, தரைப்படை தான் முக்கியம் என்று தலைமை தளபதி சிர்ஸ்கி பிடிவாதமாக இருந்தார்.

இந்த மோதலில் அதிபர் ஜெலென்ஸ்கி ராணுவத் தலைமையின் பக்கம் சாய்ந்து அமைச்சரை நீக்கினார்.

செல்வாக்கு

பெடோரோ உக்ரைன் மக்களிடையே, முக்கியமாக இளைஞர்களிடமும் தொழில்நுட்பத் துறையினரிடமும் மிகுந்த செல்வாக்கு படைத்தவர்.

அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, நாட்டில் அவருக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்றன.

தேர்தல் கோரிக்கை

அண்மையில் மிகைலோ பெடோரோ பேசுகையில், அரசிலும் ராணுவக் கொள்முதல்களிலும் ஊழல்கள் அதிகரித்துள்ளதாக பெடோரோவ் குற்றம் சாட்டினார்.

ஜனநாயக முறையில் மக்கள் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் தான் ஒரே வழி என அவர் தெரிவித்தார்.

உக்ரைன் சட்டப்படி, நாட்டில் ராணுவ ஆட்சிஅமலில் இருக்கும்போது தேர்தல் நடத்த முடியாது.

ரஷியாவுடனான போர் தொடர்வதால் அங்கு ராணுவ ஆட்சி நீடிக்கிறது. எனவே, போரின் நடுவே தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது.

ஜெலன்ஸ்கி பதில்

இதற்கு அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த ஜெலன்ஸ்கி, "போர் நடக்கும்போது தேர்தல் நடத்துவது நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சுனாமி போன்றது.

எதிரியான ரஷியா இதைப் பயன்படுத்தி உக்ரைனை எளிதில் பிளவுபடுத்திவிடும்" எனக் கூறி அதை நிராகரித்தார்.

பெடோரோ பற்றி ஜெலன்ஸ்கி

மேலும் பெடோரோவை பதவியில் இருந்த நீக்கியது குறித்து பேசிய ஜெலன்ஸ்கி, "பெடோரோவுக்கு அரசில் 4 மாற்றுப் பதவிகள் வழங்கப்பட்டும், அவர் அவற்றை நிராகரித்துவிட்டார்.

ரஷிய எல்லைக்குள் டிரோன் தாக்குதல்களுக்காக ஸ்டார்லிங்க் இணையத்தை பயன்படுத்த அதன் உரிமையாளர் எலான் மாஸ்க் ஒப்புக்கொண்டதாக பெடோரோ தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம் எனக்கு தவறான தகவலை தெரிவித்தது.

இதை நம்பி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பேசியபோது, மஸ்க் அப்படி எந்த அனுமதியும் தரவில்லை என தெரியவந்தது. இதனால் டிரம்ப்பை நான் ஏமாற்றியது போன்ற சங்கடமான சூழ்நிலை உருவானது" என தெரிவித்துள்ளார்.

இதனிடையே மேஜர் ஜெனரல் யெவ்கெனி க்மாரா புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com