

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ நிகழ்வு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக வரும் டிசம்பர் மாதத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என்றும், அதன் தாக்கம் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவுவதுடன், மழைப்பொழிவு முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும். சில நாடுகளில் கடுமையான வறட்சியும், மற்ற பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான உலக வானிலை அமைப்பில் எச்சரிக்கையின் படி
உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள பருவகால காலநிலை அறிக்கையின்படி, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் புதிய உச்சத்தை எட்டக்கூடும்.
'நினோ 3.4' எனப்படும் பகுதியில் கடல் வெப்பநிலை வழக்கமான அளவைவிட அதிகரிப்பது எல் நினோ நிகழ்வின் தீவிரத்தை அளவிடுவதற்கான முக்கியக் குறியீடாக உள்ளது.
இந்தப் பகுதியில் வெப்பநிலை மாறுபாடு கடந்த ஜூன் மாதத்தில் வழக்கத்தைவிட 1.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்த நிலையில் இது ஆகஸ்ட் மாதத்தில் இது 2.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்தது.
தற்போதைய கணிப்புகளின்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வெப்பநிலை மாறுபாடு சுமார் 3.7 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும். இது முந்தைய சாதனையான 2015-16 காலகட்டத்தில் பதிவான 2.6 டிகிரி செல்சியஸைவிட அதிகமாகும் என்று உலக வானிலை மையம் கணித்துள்ளது
எல் நினோ நிகழ்வு தொடர்ந்து வலுவடைந்து, டிசம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டும் என உலக வானிலை மையம் கணித்துள்ளது.இந்த கணிப்பின்படி, இந்த நிகழ்வு 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் நீடிப்பதற்கு கிட்டத்தட்ட 100 சதவீத வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும், 1950-ம் ஆண்டு முதல் பதிவான எல் நினோ நிகழ்வுகளில் மிகவும் வலுவான நிகழ்வுகளில் ஒன்றாக இது அமையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோவின் தாக்கத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதுடன், வழக்கமான மழைப்பொழிவு முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்று உலக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் மழை குறைந்து வறட்சி இதனால் விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.மறுபுறம், சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு, வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் உலகின் பெரும்பாலான நிலப்பரப்புகளில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வெப்பநிலை சராசரியைவிட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ நிகழ்வு இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் பருவமழை முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, இந்திய துணைக்கண்டத்தின் சில பகுதிகளில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வழக்கத்தைவிடக் குறைவான மழைப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதனால் சில பகுதிகளில் வறட்சி அபாயம் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. உள்ளூர் வானிலை நிலவரங்களும் பிற காலநிலைக் காரணிகளும் மழைப்பொழிவைத் தீர்மானிக்கும் என்று உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது
எல் நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக உலக வானிலை அமைப்பும் பல்வேறு நாடுகளின் வானிலை ஆய்வு நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளன அதன்படி
வெப்ப அலைகள், வறட்சி, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், அரசுகள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய துறைகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே உலகளாவிய கடல் வெப்பநிலை அதிகமாக உள்ள நிலையில், வலுவடைந்து வரும் எல் நினோ நிகழ்வு உலக வெப்பநிலையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
தாய்லாந்தின் பாங்காக்கில் அக்டோபர் 6 முதல் 9 வரை நடைபெறும் உலகளாவிய வெப்ப மன்றத்தின் கருப்பொருள்களில் ஒன்றாக எல் நினோ நிகழ்வும், அதனுடன் தொடர்புடைய கடும் வெப்பத்தின் அதிகரிப்பு குறித்த அறிவிப்பும் அடங்கியுள்ளது. இந்த நிகழ்வின் ஆதரவாளர்களில் உலக வானிலை அமைப்பும் (WMO) ஒன்றாகும்.