

சீன அதிபர் ஜி ஜின் பிங் கடந்த வாரம் டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும் வதந்தி பரவி வருகிறது.
கடந்த வார இறுதியில் செப்டம்பர் 12,13 டெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று முடிந்தது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் கலந்துகொள்ள சனிக்கிழமை இந்தியா வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் அன்றைய தினம் மாலை பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் அதன்பின் பிரதமர் மோடி ஏற்பாடு செய்த இரவு விருந்தில் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை. சவுதி இளவரசரும் கலந்துகொள்ளவில்லை. ஞாயிறு, மாநாடு முடிந்த பின் ஜி ஜின்பிங் சீனா திரும்பினார்.
இதனிடையே சீன அதிபர் ஜி ஜின் பங் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டபோது மயங்கி விழுந்ததாகவும், பின்னர் கடுமையான மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவின.
குறிப்பாக நாடுகடத்தப்பட்டு அமெரிக்காவில் வாழும் சீன எதிர்க்கட்சித் தலைவர் வான் ஜுன் ஷி இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்பியதாக கூறப்படுகிறது.
சமூக ஊடகப் பதிவில், வான் ஜுன் ஷி, உச்சி மாநாட்டின் போது உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜின் பிங்கிற்கு தனிப்பட்ட மருத்துவக் குழு அவசர சிகிச்சை அளித்ததாகவும், இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் இந்த விஷயம் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில், அவர் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஒரு சிறப்பு விமானத்தில் சீனாவுக்குத் திரும்ப வேண்டியிருந்தது என்றும் கூறினார்.
பெய்ஜிங்கில் தரையிறங்கிய உடனேயே, அவர் ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக ஒரு இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு பக்கவாதத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் ஷி தெரிவித்தார்.
இருப்பினும், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சீன வெளியுறவு அமைச்சகம் அட்டவணைப்படி, ஜின் பிங் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். அவர் செப்டம்பர் 12 அன்று டெல்லிக்கு வந்து முதல் அமர்வில் உரையாற்றினார்.
பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 13 ஆம் தேதி இரண்டாவது அமர்வில் கலந்துகொண்டு மதியம் டெல்லியிலிருந்து புறப்பட்டார். இந்திய அதிகாரிகள் விமான நிலையத்தில் அவருக்கு பிரியாவிடை அளித்தனர் என கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் ஜின் பிங் கலந்துகொள்ளவில்லை என்றாலும், நீண்ட பயணம் மற்றும் தொடர்ச்சியான சந்திப்புகள் காரணமாக அவர் ஓய்வு எடுத்திருந்ததாகவும், அவருக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சர் வாங் யி கலந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உச்சிமாநாட்டில் மோடி தனது உரையின் நடுவில் பேச்சை நிறுத்தி, ஜி ஜின் பிங்கைப் பார்த்து, "எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று பிரதமர் மோடி கேட்டதும் விவாதப் பொருளாக இருந்தது.
இருப்பினும், இது உடல்நலப் பிரச்சினையால் அல்ல, மொழிபெயர்ப்பு ஹெட்போன்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே நிகழ்ந்தது என்று அறிக்கைகள் கூறுகின்றன.